உழைப்பே எங்கள் உடன்பிறப்பு
வல்லமை இதழ் தந்த படத்துக்கு..
நான் தந்த தலைப்பும், எழுதிய கவிதையும்
=======================================
உழைப்பே எங்கள் உடன்பிறப்பு..!
=======================================
அன்றாடம் உழைத்தால்தான் அரைவயிறு நிறையும்
….ஆரும்நன்றாய்ப் படித்து பெரிதாய்ப் ஈட்டுவோரில்லை.!
சென்றுபோகும் இடமெல்லாம் நடந்துதான் செல்லவேண்டும்
….அன்று சம்பாதிப்பது அன்றுமட்டுமே போதாதென்றாலும்.!
நன்றாகத்தான் வாழ்கிறோம் எம் கைக்கொண்டுழைத்தே
….நல்லவேலை செய்வதற்கே நாங்களும் பிறப்பெடுத்தோம்.!
குன்றுபோல் செழித்திருக்கும் குடியிருப்பு இல்லமொன்றில்
….கூட்டுக் குடும்பமாய்வாழ கூலிக்கென்றுமே பஞ்சமில்லை.!
கருப்புக் குமரிகள்தான் நாங்களாயினு மெங்களைக்
….காதலித்து ஏமாற்றும் கயவர்பயம் எங்களுக்கில்லை.!
ஆருமில்லை ஆதரிப்போரெனும் ஆதங்கமும் இல்லை
….அன்பாலே ஏனையொரை ஈர்க்குமாற்றல் எமக்குண்டு.!
விருப்பமுடன் வீடுதேடி வேலைகேட்பின் இல்லையென
….மறுக்கமாட்டார் எடுத்தெறிந்து பேசமாட்டார் எவரும்.!
கரும்புபோல பேசிவிட்டு முகம்சுளிப்போர் நடுவே
….அரும்புச் சிரிப்புடன் ஆறுதலாய் பேசுவோருண்டு.!
இடையூறு இன்னல்கள் எதுவரினும் எதிர்கொள்ள..
….இறையருளும் எங்களுக்கு எப்போதும் உடனிருக்கும்.!
தடையில்லா வாழ்வு வாழ எங்களுக்கும் ஆசைதான்
….தருவாயா இறைவாநீ உடலுறத்தை உயிருள்ளவரை.!
நடைபோடும் தளிர்நம்பிக்கை யெனும் கொழுகொம்பைப்
….பிடித்துவாழும் பிடிமானமேயெங்கள் நிரந்தர வருமானம்.!
படையோடு பலருடன் மகிழ்ந்தெதையும் கொண்டாடுவோம்
….பக்குவமாய் உழைத்து வாழவோர் உதாரணமாவோம்.!