காதல் பட்டம்

பேஸ்புக் புண்ணியவதியின்
பேச்சைக்கேட்டதால் நேர்ந்த சோகம்.
தங்களின் கவிதை வரிகள் அருமை,
தொகுப்பாக வெளியிட்டால்,
வரலாற்றில் உன்பெயரும் இடம்பெறும்,
என்ற முகநூல் தோழமை ஒருவர்
கொடுத்த உந்துசக்தியால் நானும் மனம்மறினேன்.
உள்ளத்தில் சிதறிக்கிடந்த வார்த்தைகளை
ஒன்றினைத்து கவிதை தொகுப்பொன்று உருவாக்கிவிட்டேன்.
எனது கவிதைகள் வரலாற்றில் தடம்பதிக்கும் முன்,
என்னவளின் உள்ளத்தில் இடம்பிடிக்குமா?
ஆம் இதோ,
என்னவளுக்காக உருவாக்கப்பட்டது
இப்பொழுது அவள் கரங்களில்,
புன்னகை மலர்களை பரிசாகக்கொடுத்துவிட்டு
பனித்துளி கண்ட முயல்குட்டியைப்போல்
துள்ளிக்குதித்து ஓடிவிட்டாள்.
உலகத்தை வென்ற வீரனைப்போல்
வெற்றிநடையிட்டு செல்கிறேன் வீட்டிற்கு.
இளந்தென்றல் வீசும் மாலைநேரத்தில்
மொட்டைமாடி சொர்க்கத்திலிருந்து
அஸ்தமன சூரியனை வலியனுப்பிவைக்க
சென்றவன் வாய்பிளந்து நிற்கிறேன்.
ஆம்,
தூரத்தில் ஒரு தேவதைக்கூட்டம் ஒன்று
வானம் தொடும் முயற்சியில்
பட்டம் விட்டு பழகிக்கொண்டிருக்க,
தேவதைகளின் இளவரசியாம் என்னவளும் அங்கிருக்க,
கவிதைகள் எப்படி என கைஜாடை நான் காட்ட,
பதில் சொல்ல தென்றல் நினைத்ததோ?
விண்ணில் சுற்றிய பட்டம் ஒன்றை
வெடுக்கென பறித்து எனது கைகளில் கொடுத்தது தென்றல்.
பட்டம் சென்ற திசை நோக்கி என்னவள் பார்க்க,
பட்டத்தை நான் பார்கிறேன்,
பயபுள்ள பேப்பர் பஞ்சத்துல இருந்திருப்பா போல,
உயர உயர பரந்த பட்டங்கள் அனைத்தும்
உருகி உருகி நான் எழுதிய கவிதை தொகுப்புகள்.
அட வீணா போனவளே உன்னோட சிரிப்புக்கு அர்த்தம் இதுதானா?