ஜால்ரா வித்துவான்

====================
சத்தமாக இல்லாமல்
மனதோடு வாசிப்பேன்
புத்தகமாய் நீயிருந்தால் .

அறு துளைக்குள் விரல்வைத்து
ஒரு துளையில் இதழ்வைத்து
அருமையாக வாசிப்பேன்
புல்லாங்குழலாய் நீயிருந்தால்.

சம்மணமிட்டு அமர்ந்தபடி
மடியிருத்தி அணைத்தபடி
நரம்புகளை மெல்லத் தழுவி
நளினமாக மீட்டிடுவேன்
வீணையாக நீயிருந்தால்

தோள்களில் சுமந்துகொண்டு
வீதிவழி ஊர்வலமாய் நடந்தபடி
இருகரங்கள் கொண்டிருபக்கம்
இடிமுழக்கம் இடவைப்பேன்
மேளமாக நீயிருந்தால்.

கால்களில் கட்டிக்கொண்டு
கணீர் கணீர் சத்தம் எழுப்பி
கலகலக்கச் செய்திடுவேன்
கால்சலங்கை நீயானால்.
என்பவரெல்லாம்....

கட்செவிக்கு மகுடி ஊதுவதாகவும்
செவிடன் காதில் சங்கூதுவதாகவும்
ஒத்துப் போகாத விசயங்களுக்கு
ஒத்து ஊதும் கலைஞனாகவும்
வாழ இணைகின்ற கல்யாண பந்தத்தில்
தலைசிறந்த ஜால்ரா வித்துவானாகவும்
மாறிக் கொள்கின்றனரே...
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Jul-17, 2:35 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 89

மேலே