இலையுதிர் காலம்
காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. நான் விரைவாக நடந்தேன்.....ஒரு சிந்தனையுடன் மட்டும்- இந்த மாலை நேரத்தில் வானத்தில் படர்ந்திருக்கும் வெளிச்சம் விரட்டப்பட்டு இருள் சூழ்வதற்குள் நான் சேர வேண்டிய இடத்தை அடைய வேண்டும். அது ஒன்று மட்டுமே என் மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஏழு மாடிக் கட்டிடத்தின் அருகிலிருக்கும் பூங்காவிற்கு இருட்டுவதற்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்னை ஓட வைத்தது. நான் சுவாசிப்பதை கொஞ்சம் கடினமாக உணர்ந்தேன். அந்த பூங்கா வழியாக செல்லும் பேருந்து வரவில்லை. ஆதலால் நடந்து தான் ஆக வேண்டும். வெளிச்சம் மறைய ஆயத்தமானது. அவள் கண்களிலிருந்து வரும் என் காதல், தேகத்தை உரசி சிலிர்ப்பை உண்டாக்கும் குளிர் தென்றலை போன்று சுகமானது. அந்த பார்வையை காணவே விழைகிறேன். ஒரு கட்டத்தில் தாகத்தால் தொண்டை வரண்டது; சுவாசிப்பது கடினமாக இருந்ததால் என் வேகம் குறைந்தது. நான் அந்த பூங்காவின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். இன்னும் ஒரு அடி; பூங்காவிற்குள் நுழைந்தேன். என்னை நானே என் காதலுடன் அவளை காண அந்த இன்பங்கள் நிறைந்த உலகத்துக்குள் வருவதை உணர்ந்தேன்.
கண்களுக்கு முன் ஓர் அழகிய மாலை நேரம் தென்றலை அரவணைத்தபடி அனுபவித்துக் கொண்டிருந்தது. நடக்கும் பாதை எங்கும் உதிர்ந்த இளஞ்சிவப்பு நிறமுள்ள இலைகள்; அதில் சில காய்ந்து போனவையும் கிடந்தன. பாதையில் மெதுவான நடையில் என் கால்களுக்கடியில் சிக்கும் அந்த இலைகள் நொறுங்கும் சத்தம் தெளிவாக கேட்டது. அப்படி நொறுங்கியவற்றில் சில இலை துகழ்கள் என் மிதியடியின் அடியில் ஒட்டியது. இப்போது நான் ஒரு புதிதான குளிர்ச்சி நிறைந்த தென்றல் என்னை உரசிச் செல்வதை உணர்ந்தேன். அதுவே என் மனதினுள் என்றுமில்லாமல் இன்று நான் அனுபவிக்கும் ஒரு இதமான மாலையாக தென்பட்டது.
இது நான் அனுபவிக்கும் ஓர் அழகிய இலையுதிர் காலம். மாலை நேர சூரியனின் கதிர்கள் அடர்ந்த மரக்கிளைகளுக்கிடையில் பதுங்கியிருக்கும் சிறு சிறு இடைவெளிகள் வழியாக பாய்ந்து வந்து பார்ப்பவர் கண்களை கூசச் செய்தது; இந்த அழகான இயற்கையை ரசித்தபடி எனக்காக காத்திருக்கும் என் அன்புக்குறியவளை, அந்த மாலை நேரத்தின் மெல்லிய கதிர்கள் அவளை தொட்டுவிட்ட ஆணவத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது; ஒரு பறவை மாலை நேரத்தை நினைவு படுத்தும் வகையில் தனக்குறிய குரலில் பாடியது; இலைகள் ஆங்காங்கே உதிர்ந்து கொண்டிருந்தன. அதில் ஒன்று என் தலை மீது விழுந்து என் நெற்றியை உரசியபடி கீழே விழுந்தது. அவள் அருகில் வந்தேன். கடந்த வருடத்திலும் இதே மாதிரியான ஒரு இலையுதிர் கால மாலை நேரத்தில் நாங்கள் சந்தித்தோம்; கைகள் கோர்த்து என் தோளில் அவள் தலை வைத்து ஏதோ ஓர் அழகான நினைவினை பற்றி பேசிக் கொண்டே நடந்தோம்.
பொய்கள் நிறைந்த கருத்துக்கள்,
கருத்துக்கள் நிறைந்த கற்பனைகள்,
கற்பனைகள் நிறைந்த கதைகள்,
கதைகள் நிறைந்த சொந்தங்கள்,
சொந்தங்கள் காட்டும் அன்பு,
அன்பினால் உணரப்படும் இறைவன்,
இறைவன் தரும் ஆனந்தம்,
ஆனந்தம் நிறைந்த இரவுகள்,
இரவுகளை கைதாக்கும் கனவுகள்,
கனவுகளில் தெரியும் காதல்,
காதலாகி கலந்திருக்கும் நீ..
பொதுவாக நாங்கள் பேசுவது இவற்றை பற்றியே.
அந்த நினைவுகளை எண்ணி மகிழ்ந்தபடியே அவள் அருகில் அமர்ந்தேன். எங்கள் விழிகளின் பார்வைகள் மோதிக் கொண்டது. எங்கள் விழிகளுக்குள் நாங்கள் எங்களையே பார்த்து சிரித்து கொண்டோம். அந்த ஒரு நிமிடம் இந்த உலகத்தையே நான் இனிமையாக உணர்ந்தேன். நாங்களே உலகில் மிகவும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக உணர்ந்தோம். வார்த்தைகளை தாண்டி ஓர் இதமான அமைதி எங்களை அணைத்து கொண்டது. வார்த்தைகள் எங்களுக்குள்ளேயே சிக்கிக் கொண்டாலும் இருவருக்கிடையில் இருந்த அமைதி தித்திப்பாக இருந்தது. அந்த அமைதியினாலேயே எங்களது புரிதல் அதிகமாவதை உணர்ந்தோம். எங்களது தனித்துவமான உணர்வுகள் எங்களிடையில் அமர்ந்திருந்த அமைதியில் அடங்கி போனது. யாரேனும் எங்களை கடந்து போகும் சமயம் அவர்கள் எங்கள் மீது வீசும் கிண்டலான பார்வை தேவையற்ற ஒரு செயல் என்பதை உணர்த்த நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்து கொண்டோம். எதற்காக அமைதி எங்களை சூழ்ந்துள்ளது என்பது எங்கள் இருவருக்குமே புலப்படவில்லை. இது எதற்காக என்பது புரியாவிட்டாலும் இதுதான் 'காதல்' என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.
மாலை நேரத்து வெயிலையும் நிலத்தில் விழ விடாமல் தாங்கி பிடித்து நிழலை உதிர்த்த மரங்களுக்கடியில் படுத்து அந்த சூரியனின் மெல்லிய கதிர்கள் உண்டாக்கும் மஞ்சள் மேகத்தை அவளுடன் சேர்ந்து ரசிக்க மனம் ஏங்கியது. அதையே நாங்கள் செய்தோம். ஒரு மரத்தின் அடியில் உதிர்ந்த இலைகளின் மேல் அமர்ந்து அந்த வானை பார்த்தோம். மேகமொன்று கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கடந்து சென்று கொண்டிருந்தது. மாலை நேர வெளிச்சம் கண்களை கூசினாலும் மெல்லிய தென்றல் பட்டு பசுமையாக உணர்ந்தோம்.
எது எங்களை சுகமான உணர்வுக்கு தள்ளியது?
இயற்கையின் நறுமனமா?
மரத்தின் இலைகளை நடனமாடச் செய்யும் தென்றலா?
புரியவில்லை. வண்டுகள் ரீங்காரமிடும் சத்தம் கேட்டது; வழிப்போக்கர்கள் கடந்து செல்லும் சத்தம் கேட்டது; இந்த மாலை எங்களுக்கு புதிதாக தோன்றினாலும் எங்கள் கடந்த சந்திப்பை விட இது தித்திப்பாக தெரிந்தது.
தூரத்தில் ஒருவன் புல்வெளியில் அமர்ந்து கொண்டு பஞ்சு மிட்டாய் செய்து விற்று கொண்டிருந்தான். நாங்கள் அதை பார்த்தோம். அவள் என்னை பார்த்தாள். அந்த மிட்டாயின் சுவையை இந்த இனிப்பான தருணத்தில் உன்னோடு அனுபவிக்க வேண்டும் என்று எங்கள் இருவர் மனமும் ஏங்கியது. அதை வாங்கி அவளிடம் கொடுத்தேன். அவள் மெல்லிய இதழ்களால் மெதுவாக பிய்த்து தன் வாய்க்குள் இழுத்துக் கொள்ளும் அழகை பார்த்து ரசித்து புன்னகைத்தேன். அந்த மிட்டாய்க்காரன் நான் கொடுத்த சில்லறையை ஒவ்வொன்றாக எண்ணுவது காதில் விழுந்தது. சாப்பிட்டு கொண்டே நடந்து மீண்டும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே வந்தோம்.
எங்களை சுற்றி எத்தனை மனிதர்கள்; அவர்கள் மனங்கள் வெளிப்படுத்தும் அன்பு; அவையே எங்களுக்கு பயம் நீங்கும் ஆறுதலை தந்தது. என் மனதுக்குள் ஒரு அழகான பாடல் வரி ஒலித்தது. அங்கே இருந்தவர்களில் எத்தனை மனங்கள் நாட்கள் கடந்தும், வருடங்கள் கடந்தும், வயது முதிர்ந்தும் தங்கள் காதலை அவர்கள் அன்புக்குறியவர்கள் மீது குறைவில்லாமல் காட்டுகிறார்கள்- ஒருவர் கடக்கும் பாதையை மற்றொருவர் கடக்க; ஒருவர் அனுபவிக்கும் துன்பங்களை மற்றொருவர் அனுபவிக்க; எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலை மட்டும் வெளிப்படுத்தும் மனங்கள்; அவளுடன் இவற்றை பார்த்து ரசிக்கும் இந்த ஒரு நிமிடம் கடந்து செல்லாமல் நிரந்தரமாக இருக்காதா என மனம் ஏங்கியது.
மாலை வெளிச்சம் மெதுவாக மங்கியது. நாங்கள் மண் வாசனை வீசும் அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தோம். என்னை சுற்றிலும் மரங்களின் அசைவுகள், பறவைகளின் பாடல்கள், தென்றல் காதருகே வருடிச் செல்லும் சத்தம், விளையாடும் குழந்தைகளின் சிரிப்புகள் இவற்றை என் நினைவுகளில் பத்திரமாக புதைத்துக் கொண்டேன். அவள் என் அருகில் அமர்ந்திருப்பதை இதமாக உணர்ந்தேன். அவளை பார்த்து புன்னகைத்து நான் என் பார்வையை வானில் படரவிட்டேன். வானம் அதன் நீல நிறத்தை இழந்து கொண்டிருந்தது.
அவள் தனது மெல்லிய குரலால் என்னை அழைத்தாள்.
"விஜி"
திடீரென்று காலம் மாறியது. நாட்கள், மாதங்கள் கடந்தது.
ஏகப்பட்ட வலிகள், அழுகைகள், சமாதானங்கள் என் வாழ்க்கையில் அந்த ஒரு நொடியில் கடந்து சென்றது.
எப்படி இப்படி ஒரு மாற்றம்? மெய்யான இந்த ஒரு நிமிடம் கடந்தகாலத்தை விடவும் கொடுமையானது. கடந்து வந்த இன்பங்களும் வலிகளையே தரும் என்றால் யாருக்கு வேண்டும் இந்த நிகழ்காலம்? மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்பதற்காக கடந்து வந்த வலிகளை பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருந்தாலும் மனதிற்குள் கற்பனையாக இருக்கும் மலர்ச்சியான இன்பங்கள் நிறைந்த உலகத்தில், அவர்கள் இழந்தவற்றை திரும்ப பெற்று வாழவே ஏங்குகிறார்கள்.
மறைமுகமாக நான் உணர்ந்தது என்னை மேலும் வலியில் ஆழ்த்தியது. இங்கே என்னை சுற்றி இருக்கும் மனிதர்களின் மனங்கள் எத்தனை வலிகள், எத்தனை ஏமாற்றங்களை கடந்து வந்திருக்கும்; அத்தனை துன்பங்களையும் சகித்து கொண்டு நிகழ்காலத்தில் மீண்டும் ஒரு காதலை அரவணைத்து வாழும் மனங்கள் என்னை வியப்படைய செய்தது.
இந்த ஒரு காதலால் ஏதேனும் உண்மை செயல்படுத்தப்பட்டதா?- இல்லை! இதனால் மனதின் நம்பிக்கை காப்பாற்றப்பட்டதா?- இல்லை. கனவுகளின் கலாபத்தில் வாழ்ந்திருந்தேன். காதல் என்று என் மனதிலிருக்கும் அந்த உணர்வின் மேல் தான் காதலோ? அவள் என்னுடன் இருந்த தருணங்களில் நான் சுகித்த இன்பங்கள் மேல் காதலா? இதையே நான் மனித காதல் என்று தவறாக புரிந்திருக்கிறேனோ?
நினைவுகள் கலைந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நடந்தேன். கண்களுக்கு முன் தெரிந்த அழகிய மாலை நேரம் இருள் சூழ்ந்த இரவை தழுவியது. உதிர்ந்த இளஞ்சிவப்பு நிறமுள்ள இலைகள் தென்றலின் தீண்டல் இல்லாமல் பாதையில் அசையாமல் படர்ந்திருந்தது; அவளுடன் இருந்த நினைவுகளை விட்டு செல்ல முடியா விட்டாலும் நாங்கள் பேசிய வார்த்தைகள் காற்றில் கலந்திருந்து என் காதருகே ஒலிப்பதை உணர்ந்தேன். அதுவே என் மனதுக்கு என்றுமில்லாமல் இன்று நான் அனுபவிக்கும் ஒரு தனிமையான மாலையாக தென்பட்டது. இதையே நான் அவள் நினைவுகளுடன் மட்டும் அனுபவித்த ஓர் இலையுதிர் காலமாக உணர்ந்தேன்.
-விஜய்