நதிக்கு பாடலா

உனை தேடி அலைகின்றோம் உயிர் வாழவே
ஓடோடி வருவாயா ? மண்மீது எமைத் தேடியே !

மலைமீது பிறந்தவளே ! மாசில்லா வெண்துகளே!
மழைக்கு பிறந்தவளே! மடிதவழ வாரோயோ!?
நிலையென்று நம்பியே நிர்க்கதியாய் விட்டுவிட்டோம்!
நில்லாது வந்திடவே நேர்த்திகடன் செய்து நின்றோம்!

அழைக்கும்போது வாராது அழுகையை வரவைப்பாய்!
அழையாத போதேதான் ஆர்ப்பரித்து வந்திடுவாய்!
தழைக்கும் பயிர் கருகுதம்மா? தாகமும் எடுக்குதம்மா !
தரணிவாழ வந்துவிட்டால் தேரிழுத்து மகிழ்வோமே!

நீயின்றி உலகில்லை! நினைத்து பார்க்கும் நேரமிது
நெடுநாளாய் காத்திருந்தும் நின்கருணை படவில்லை!
தொய்வாக இருக்கின்றோம் ! தோள்கொடுக்க வருவாயா? தொல்லைகளை மறந்துவிட்டு துயர்துடைக்க வந்திடுவாய்!

மடிசுரண்டி பிழைத்தோமே! மன்னித்து பொறுத்திடுவாய்
மாளாத துன்பத்தையே மனதார பொறுத்தவளே!
அடிதொட்டு வணங்கினோம் அரவணைத்து கொள்வாயோ?
அழைத்தபின்னும் அசைந்து வருவது ஏன்தானோ?

கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (18-Aug-17, 8:29 pm)
பார்வை : 148

மேலே