நினைவெல்லாம் கண்ணம்மா

சின்னஞ் சிறுவயதில் - வந்து
சீறும் கனவுகளில்
என்னைப் படுத்திடுவாள் - கவி
எழுத்து உரு கொண்டிடுவாள்
இன்னும் வளர்ந்திடவே - உரு
இயக்கம் மாற்றிவிட்டாள்
கன்னி வடிவானாள் - நான்
காதலும் கொண்டுவிட்டேன் !

அவள் பெயர் கண்ணம்மா !
அவள் தான் கண்ணம்மா !

பாட்டைப் பிதற்றிடிடினும் - பல
பாடம் புகட்டிடினும்
சேட்டை நிகழ்த்திடினும் - சினம்
சேரா உயர் அகத்தாள்
ஓட்டை எங்கு கண்டாள் - மனது
ஓரம் அமர்ந்து கொண்டாள்
நீட்டும் நினைவினிலே - எனை
நித்தம் நனைத்திடுவாள் !

அவள் பெயர் கண்ணம்மா
அவள் தான் கண்ணம்மா !

காதலில் தொட்டுவிட்டால் - கொஞ்சும்
கண்ணில் முரண்பிடிப்பாள்
மோதலில் விட்டுவிட்டால் - வந்து
முதலில் அரவணைப்பாள்
பாதியில் வந்தவள் தான் - என்
பாதி என்றாகி விட்டாள்
ஆதியில் வந்திருந்தால் - உயிர்
அனைத்தும் கொண்டிருப்பாள் !

அவள் பெயர் கண்ணம்மா !
அவள் தான் கண்ணம்மா !

விட்டுப் பிரிவம் என்றால் - உயிர்
வீங்கி வியர்த்திருப்பாள்
கட்டித் தழுவச் சொன்னால் - உடன்
காதல் கொடுத்திடுவாள்
சொட்டும் அமுதத்தினை - இதழ்
சொப்பில் வழங்கிடுவாள்
ஒட்டி உயிர்வளர்வாள் - என்
ஒருநிழல் ஆகிடுவாள் !

அவள் பெயர் கண்ணம்மா
அவள் தான் கண்ணம்மா !

என்னை அறிந்திடுவாள் - பழி
ஏறும் பொழுதினிலே
முன்னம் எனைக் காப்பாள் - பகை
மூளும் வகை தீர்ப்பாள் !
என்னைப் பிரிந்தாலும் - உயர்
ஏற்றி வைத்துவிட்டாள்
அன்னவள் காதலினைத் - தனி
அற்புதம் என்று சொல்வேன் !

அவள் பெயர் கண்ணம்மா
அவள் தான் கண்ணம்மா !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (23-Aug-17, 12:18 am)
பார்வை : 88

மேலே