ஞானக்கூத்தன் படைப்பு----எங்கும் இருக்கும் கங்கை

இந்திய மொழி இலக்கியங்கள் எல்லாவற்றிலும் கங்கை நதி பேசப்பட்டிருக்கிறது. ஜானவி, வேகவதி என்றும் கங்கைக்குப் புராணப் பெயர்கள் உண்டு. பகீரதன் அரும்பாடு பட்டு கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்தான் என்பதால் கங்கைக்குப் பாகீரதி என்ற பெயரும் உண்டு. கங்கா, யமுனா, ஸரஸ்வதி, ஸுதுத்ரி, பருஷ்ணி என்று 21 நதிகளின் பெயரை ரிக் வேதம் குறிப்பிடுகிறது என்கிறார் ஓர் ஆராய்ச்சியாளர். வேதத்துக்குச் சற்றுப் பிந்திய நூல்களில் அப்ஸரஸ் என்ற அழகிகள் கங்கைக் கரையில் உலவுவார்கள் என்று கூறப்படுகிறது. இமயமலைக் கடவுளான சிவன் தன் ஜடாமுடியில் தாங்கியிருப்பதால் கங்கை சிவகங்கையும் ஆகிறாள். பரிபாடல் ஜலத்தைத் தரித்திருப்பதால் சிவனை ஜலதாரி என்கிறது.

ஆண்டில் ஒருநாள் இந்திய நதி ஒன்றில் கங்கை கலப்பதாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் திருவிசைநல்லூர் என்ற சிற்றூரில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு கிணற்றில் தண்ணீர் ஊறும், பெருகும். இதைக் கங்கையின் ப்ரவாகம் என்கிறார்கள். தீபாவளி கொண்டாடும் போதும் கங்கா ஸ்நானம் ஆயிற்றா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை மன்னரான முத்து விஜயரங்க சொக்கலிங்க நாயகர் அரங்கேற்றுவித்த குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவிராயர் (17-18ம் நூற்றாண்டில்) எழுதுகிறார்.

மோன வானவர்க்கு எங்கள் கானவர்கள் காட்டும்
முதுகங்கை ஆறுசிவ மதுகங்கை ஆறே …

கவிராயர் சிவ மது கங்கை ஆறுதான் கங்கை ஆறென்று கானவர்கள் அடையாளம் காட்டுவார்கள் என்று பாடுகிறார். திரிகூட ராசப்பக் கவிராயர்க்கு மட்டுமல்ல, அவருக்குப் பின் வந்த பாரதியார்க்கும் மற்ற கவிஞர்களுக்கும் கங்கை பிரபலமான நதிதான்.

வெளிநாட்டிலும் கங்கைக்கு நேயர்கள் உண்டு. நவீன தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எழுத்தாளராகத் தெரிந்திருக்கும் Jorge Luis Borges (1899-1986) ஒரு கங்கைப் பிரியர்தான். 1923ம் ஆண்டிலேயே Benares என்று பெயரிட்டு ஒரு கவிதை எழுதியிருக்கிறார். T.S. Eliot மற்றும் Baudelaire இந்தியப் பெண்ணைக் குறித்து ஓரிரு கவிதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் இந்திய ஆற்றைப் பற்றி எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. காளிதாஸரின் சகுந்தலையைக் குறித்து ஜெர்மன் மகாகவி கதே (Goethe) பாடியிருக்கிறார் தெரியுமா?

Borgesன் கவிதையில், இந்தியர்களிடம் உள்ள நம்பிக்கை அழகாகக் கையாளப்பட்டுள்ளது.

You gleam, like the cruel blades of cutlasses
you take the forms of dreams, nightmares, monsters.
To you the tongues of men attribute wonders
Your flights are called the Euphrates or the Ganges.

(They claim it is holy, the water of the latter,
but, as the seas work in their secret ways
and the planet is porous, it may still be true
to claim all men have bathed in the Ganges.)

என்று பாடுகிறார் ஸ்பானிஷ் மொழியில் எழுதும் போர்ஹஸ், Poem of the Fourth Elementல். Happiness என்ற கவிதையில்

Whoever goes down to a river goes down to the Ganges

என்றும் பாடுகிறார் கவிஞர்.

*

குறிப்பு: பெரும்பாணாற்றுப்படை கங்கையைப் பற்றிக் கூறுகிறது.

இமையவர் உறையும் சிமையச் செவ்வரை
வெண் திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித் திழிதரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒருமரப் பாணியில் தூங்கியாங்கு …

என்பது பெரும்பாணாற்றுப்படைப் பாட்டு. அதாவது கங்கைக் கரையைக் கடக்க விரும்புபவர்கள் தோணிக்காகக் காத்திருக்கும்போது சாய்ந்து தூங்குகிறார்களாம். ஒரு தோணிதான் உள்ளதென்கிறார் புலவர்.

எழுதியவர் : (29-Aug-17, 5:15 am)
பார்வை : 52

மேலே