உலகில் முக்கால் பாகம் நீதான்
நீரே! உலகில் முக்கால் பாகம்
நீதான்!
ஆயினும்
நீ கிடைக்கவில்லை என்றுதான்
உலகமே மூக்கால் அழுகிறது!
வாய்க்கால், குளம், குட்டை
வற்றாத நதி, கடல் என்று
உனக்குப் பல முகங்கள்.
ஆதவனின் வெப்ப அணைப்பில்
ஆர்வமாய் கருவுற்று
மேகங்களைப் பிரசவித்து
வேகமாய் நீ மண்ணில் குடிபுகுவாயென
தாகமாய் நாங்கள் இங்கு
சோகச்சூழ்நிலையில்!
நீ குதித்தால் அலை!
கொதித்தால் சுனாமி!
அணைக்கட்டுமா என்று நீ
எங்களை நோக்கி
ஆவலோடு வரும் வழியில்
அணைக்கட்டுக்களைக் கட்டி
உன்து
ஆசையையும், பாசத்தையும்
கெடுக்கிறார்கள்
அண்டை மாநிலத்தார்!
வானிலிருந்து நீ
வாராத பருவத்தில்
தானாய் எங்கள் விழிகளில்
தாரைத் தாரையாய் கண்ணீர் மழை!
மலையில் பிறந்து, நதியில் ஓடி
கடலில் சங்கமிக்கும் நீ
மனிதர்களின் உணர்வுகளில்
சங்கமிப்பது எப்போது?
வான் பொய்த்தாலும் தான் பொய்க்கா
வற்றா அன்னை எங்கள் காவிரியை
வாழவைக்கும் வரம் உன் கையில்!
நீரின்றி அமையாது இவ்வுலகு!...அந்த
நினைவிருந்தால்
எங்களோடு குலவு!