கனவுகளை கலைக்காதீர்கள்
அவர்கள் காரணம் இவர்கள் காரணமென்று
ஆளுக்கொருவர் மீது பழி சுமத்தி
விவாதித்து கத்திய எல்லோரும்
வீடு போய் சேர்ந்து விட்டார்கள்
முகமருகே முட்டிக் கொண்டும்
ஒன்றுக்கொன்று முந்திக் கொண்டும்
உலகின் செவிகளில் பறையடித்த
நடுநிலை தவறாத ஊடக தர்மமெல்லாம்
நாளைய கலவரத்துக்காய் காத்துக் கிடக்கிறது
சாலைகளிலும் சர்க்கார் வாசலிலும்
சமூக வலைதளத்திலும்
பொங்கியெழுந்து போராடிய
திடீர் போராளிகளெல்லாம்
திசைக்கொன்றாய் போய்விட்டார்கள் அதோ
உயிரின் மதிப்பை
இலட்சங்களில் எழுதி விட்டு
இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லையென்பதாய்
எதுவும் தெரியாதது போல் இருக்கிறது
எப்போதோ மாண்ட அரசொன்று
நானும் இதோ மாண்ட உயிருக்கு
மயிரு கவிதையொன்றை எழுதிவிட்டு
மனசாட்சி கவிஞென்று
மற்றவர்களிடம் பீற்றிக் கொள்வேன்
காதலுக்காகவும்
கற்புக்காகவும்
கல்விக்காகவும்
போராடிப் போராடித் தோற்று
கடைசியாய் உயிரையும் விட்ட
உங்கள் நாளைய இந்தியாவின்
நிறைவேறா கனவுகளெல்லாம் என்ன செய்யும்?
இதோ
இவ்வுலகம் உறங்கும் இவ்வேளையில்
அவர்களின் கனவுகளெல்லாம்
உங்கள் மனசாட்சி வீதிகளில் அலையும்
ஆமாம்
உங்கள் மனசாட்சி வீதிகளில் அலையும்
நீங்கள் மனிதர்களென்றால்.....