பூவுக்குள் பூவனம்
பூவுக்குள் பூவனம் . . .
அவள் ஆடையில்
அரங்கேற இயலா பூக்கள்
பூத்தும் புழுங்குகின்றன . . .
அவள் வடித்த
ஆனந்தக் கண்ணீரின்
ஓர் துளி
அவ்வனத்தையே
மூழ்கடிக்கிறது
பசுமையில் . . . .
அவள் பேசும்
மொழியினை முயன்று
தோற்றக் கிள்ளைகள்
தன்னைத் தானே
சிறைபடுத்திக் கொள்கின்றன
கூட்டோடு . . . . .
அவள் செல்லும்
வழியெங்கும்
கற்றாழைகள் தன்
கூரிய முனைகொண்டு
பச்சைக்குத்தி மகிழ்கின்றன
அவள் பெயரை . . .
அலை அலையாய்
திரை போட்டு
முகத்தை மறைக்கிறது
காற்றையும் காணவிடாது
அவள் கேசம் . . . .
அவளது வாசனையை
மோர்ந்து நுகர்ந்த காற்று
வீசும் இடமெங்கும்
தெளித்து சொல்கிறது
அவள் வருகையை . . .
அவள் காலடி
ஓசையை கேட்டிடும்
ஆவலில் விரிக்காது
இதழ்மூடி ஏங்குகின்றன
மொட்டுக்களாய்
பூக்கள் . . . .
தன் குலப்பெருமை காத்த
அவள் இரு கண்களை
கண்ணுற்று கசிகின்றன
நீரெங்கும் மீனின் கண்கள் . . .
அவள் நடைபயிலும்
பாதையெங்கும்
தன் முதுகை வளைத்து
நிழல் கூடாரமிட்டு
அவள் பாதம் பட்ட
மண்ணின் சருமத்தை
காயவிடாது காக்கின்றன
விருட்சங்கள் . . .
சு.உமாதேவி