விடுதி வாழ்க்கை
சகிப்புத்தன்மை எனும் பாடத்தினை
சகலருக்கும் கற்பித்த சிறு பாடசாலை
தான் எங்கள் விடுதி அறை...
பகல் பொழுதுகள் கல்லூரியில்
கழித்த போதும் இரவில் இளைப்பாற அந்த நான்கு பக்க சுவருகளின் இணைப்பு தான் நாங்கள் கண்ணயர்ந்த
அன்னை மடி..
வீட்டில் தனக்கென தனிஅறையில்
தனி இராச்சியம் புரிந்த காலங்களை
மறந்து..
அறை ஒன்றையே அனைத்திற்கும்
களமாய் மாற்றி விட்டோம்...
விருப்பமில்லாத உணவுகள்
வீட்டின் சமையறையில்
கண்ட போது ஆடிய பத்ரகாளி ஆட்டங்கள்
எல்லாம் இங்கு உண்ணும் உணவுகளை
பார்த்து ஏளனமாய் சிரிக்கின்றன...
ருசியில்லாத உணவுகளும்
வயிற்றுக்குள் பசிக்காய்
பறக்கும் பட்டாம் பூச்சிகளின்
இரைக்காய் விழுங்கப்படுகின்றன...
மிஞ்சிய சாப்பாடுகளை தொட்டியில்
போட முன் புழுக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருகின்றன..!
காத்திருப்புகள் குப்பை எடுத்து செல்பவர்களுக்காகவும் நீடிக்கின்றன...
தரை எனும் பஞ்சுமெத்தையில்
தலை சாய்த்த போதும் மழை காலத்தில் குளிர் எனும் போர்வையினால்
தூக்கமிழந்து போனோம்
இடியும் மின்னலும்
வானத்தை அலங்கரித்த போது
அருகில் அன்னையன்பு தேடினோம்...
கருத்து வாதங்கள் நண்பிகளுக்கிடையில் வந்த போதும்
விடுதி உரிமையாளரை கலாய்க்கும் தருணங்களில் அனைவரிடத்திலும்
ஒரே வாதமே...!
அன்னை பாசமறிய
இவ்விடுதியறை போதும்...
விடுதலை திகதியை எதிர்பார்த்தவர்களாய்...!