அறுபதில் அடிவைக்கும் அடியேன்

அகவை அறுபதில்
அடிவைக்கும் இந்நாளில்
அலைமோதுது நினைவுகள் !

அரங்கேறிய நிகழ்வுகள்
அகமகிழ்ந்த பொழுதுகள்
அங்கலாய்த்த நிமிடங்கள்
அழவைத்த துயரங்கள்
அதிரவைத்த நொடிகள்
அசாரதாண சூழல்கள்
அகால மரணங்கள்
அடிமனதில் நிழலாடுது !

மகிழ்ந்திருந்த நேரங்கள்
வலிமிகுந்த தருணங்கள்
வருந்திய மணித்துளிகள்
வலம்வருகிறது மனதில் !

சுற்றியிருந்த நட்புகளை
சுயநலமிலா நெஞ்சங்களை
உதவிசெய்த உள்ளங்களை
உள்ளத்தில் வாழ்பவர்களை
என்னிதயம் தொட்டவர்களை
எண்ணுகிறது இதயம் !

ஆறுபத்து வயதினை
அடியேன் தொட்டாலும்
ஆற்றலில் வளரவில்லை
அறிவாலும் உயரவில்லை
அதனை மறுக்கவில்லை !

பெருமைப்பட ஒன்றுமில்லை
பெயரளவில் பிரபலமில்லை
சாதனைகள் புரியவில்லை
சராசரி மனிதனே நான் !

ஒதுங்கியும் வந்துள்ளேன்
ஒதுக்கப்பட்டும் உள்ளேன்
ஒவ்வாத இதயங்களுடன்
ஒத்துப்போக முடியுமா !

முற்றுப்பெறா ஆசைகளும்
முடிவடையா செயல்களும்
இருக்கத்தான் செய்கிறது
இதயமதை சுமக்கிறது
இதுவொன்றும் புதிதல்ல
இயற்கையே எவருக்கும் !

முடிவறியா முடிவினை
முடிந்திடும் நொடியினை
நோக்கித்தான் பயணமும்
நோக்கமும் ஏதுமின்றி !
நிரந்திரமிலா வாழ்வில்
நிச்சயமுண்டு இறுதிநாள் !
தீர்ந்திடா ஆசைகளும்
தீக்கிரையாகும் அந்நாள் !

உலகத்தைக் காணவைத்த
பெற்றவர்களை வணங்குகிறேன் !


பழனி குமார்
12 .10 .2017

எழுதியவர் : பழனி குமார் (11-Oct-17, 9:36 pm)
பார்வை : 994

மேலே