ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடப் பாப்பா - உனக்கு
ஒருவரும் இல்லையா பாப்பா?
வாடி நிற்காதே பாப்பா! - நீ
வாக்கிங் தினமும்போ பாப்பா!
*******
புத்தகம் படிப்பதுதான் படிப்பு - எனப்
புரியாமல் பேசுவார் பாப்பா!
சத்தியம் படிப்பதுதான் படிப்பு! - நீ
சார்ந்துநில் பெரியோரைப் பாப்பா!
*******
படித்துப் பட்டம்பெற்ற உடனே - சிலர்
பறப்பார் வெளிநாடு பாப்பா!
கிடைத்த வாய்ப்பில்நீ உயர்ந்து - நாட்டைக்
கீர்த்தி அடையச்செய் பாப்பா!
*******
உணவே மருந்தாகும் பாப்பா! - நீ
உண்ணுமுன் யோசிப்பாய் பாப்பா!
கனவே காணச்சொன்னான் கலாம்தான்! - அது
கண்டு பிடிப்பின்தாய் பாப்பா!
*******
மஞ்சள் பூசிக்குளி பாப்பா! - நீ
மருதாணி மறக்காதே பாப்பா!
கொஞ்சம் ஆடையிலும் கவனம் - நீ
கொண்டிட வேணுமடி பாப்பா!
*******
ஏழ்மை சாபமல்ல பாப்பா! - என்றும்
எளியோர் இளப்பமில்லை பாப்பா!
தாழ்வு மனப்பான்மை போக்கி - அவர்
தலையை நிமிர்த்திவை பாப்பா!
*******
மருத்துவம் எளிதாக்கு பாப்பா! - யார்க்கும்
மனப்பயம் கூடாது பாப்பா!
கருத்தினில் ஒற்றுமைதான் வேண்டும்! - நாட்டில்
கட்சிகள் போதுமடி பாப்பா!
*******
நாட்டின் நிலைமையின்று மோசம்! - குணம்
நல்ல வர்களிங்குக் கோழை!
கேட்டைத் துணிந்துசெய்வார் கையில் - நாடு
கிடந்து தவிக்குதடி பாப்பா!
*******
நல்ல வருவாயும் மதிப்பும் - இங்கு
நமக்குக் கிடைத்துவிட்டால் போதும்!
தொல்லை மற்றதெல்லாம் எதற்கு? - எனத்
தூர விலகிநிற்பான் பாவி!
*******
பாவியாய் இருக்காதே பாப்பா! - உன்
பலத்தை நீயுணர்வாய் பாப்பா!
சேவைக்குத் தயாரானால் பாப்பா! - உன்
தெய்வம் உதவிசெய்யும் பாப்பா!
*******

எழுதியவர் : கௌடில்யன் (26-Oct-17, 11:51 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 1147

மேலே