அழகு தேசம்

அல்லிமலரும் கருவண்டும் அமர்ந்திருக்கும்
வேடந்தாங்கலானது இவள் கண்கள்
இளம் பிறை இவள் நெற்றி கண்டு சோகத்தால்
மேகத்தினுள் தலை மறைக்க
படர்ந்து விரியும் இவள் கருங்குழல் கண்டு
மேகம் சீற்றம் கொண்டு விரைந்து மறைந்தது
சிப்பியின் செதுக்கலுக்கு இவள் அழகு மாதிரி
அழகு இரட்டிப்பானது இவள் அணிந்ததால் கைத்தறி
பருவம் இவள் உடலில் பளிங்குப் போர் செய்ய
ரோஜாக் கூட்டத்தின் செம்மைப் புரட்சித் தளமானது இவள் இதழ்கள்
வள்ளுவன் வரிகளுக்கும் சிக்காத வடிவு தேசம் இவள்
என் நெஞ்சுக்கும் நினைவுக்கும் கனவுக்கும்
தனிமை மகிழ்வுக்கும் காரணமானவளே
ஒருமுறை என்னைக் கண் திறந்து பாராயோ
ஆக்கம்
அஷ்ரப் அலி