பேராசிரியர் நன்னன் இறுதி நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி
8, நவம்பர் 2017 (18:55 IST)
இடுகாடு வரை வந்தார் மனைவி!
திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தமிழறிஞருமான பேராசிரியர் நன்னன் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் அவருடைய மனைவியும், இரு மகள்களும் கலந்துகொண்டு, அவருடைய உடலை எரிமண்டபத்திற்கு வழி அனுப்பிய காட்சி அனைவரையும் நெகிழச் செய்தது. அத்துடன் நன்னன் அவர்களின் கொள்கை உறுதியையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.
செவ்வாய்க்கிழமை மறைந்த பேராசிரியர் நன்னன் அவர்களின் இறுதி நிகழ்ச்சி இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. கருப்புச்சட்டை அணிந்த நன்னன் உடல் இடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
திராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, நன்னன் உடல்வைக்கப்பட்ட வண்டியின் பின் நடந்து வந்தார். அவருடன் சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நடந்து வந்தனர்..
பேராசிரியர் நன்னன் மகள்களிடம் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்த போது,
அருகில் அவரது மனைவி பார்வதி அம்மாள்
தமிழறிஞர்கள் திராவிட இயக்க தோழர்கள் சூழ கண்ணம்மாபேட்டை தகன மேடைக்கு நன்னன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறக்கிவைக்கப்பட்ட அய்யா நன்னன் அவர்களின் உடலுக்கு அருகில் அவரின் துணைவியார் பார்வதி அம்மாவும் அவர்களின் இரண்டு மகள்கள்களான வேண்மாள் மற்றும் அவ்வை ஆகியோரும் வந்து நின்றனர்.
துயரம் நிறைந்த பார்வையோடு தன் அன்புக் கணவரின் முகத்தை வருடி அவரது கரங்களைப் பற்றியபடி பார்வதி அம்மா நன்னனிடம் இப்படிக் கூறினார்….
“நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டேன்..இந்தக் கையைப் பிடித்துதான் சொன்னீர்கள். இந்தக் கொள்கையை நான் செத்தபிறகு யாரும் விட்டுவிடக்கூடாது..என்னை அடக்கம் செய்யும்போது என் கொள்கைக்கு எதிராக எதுவும் நடக்கக்கூடாது ன்னு…நீங்க சொன்னமாதிரியே கொண்டுவந்து சேத்துட்டேன். அதை உங்களிடம் சொல்வதற்குத்தான் வந்தேன்….’
அவருடைய இந்த வார்த்தைகள், சுற்றி நின்ற அத்தனை பேரையும் நெகிழ்ந்து கலங்க வைத்தது அவரது அன்பும் மன உறுதியும். தன்னை ஒரு முழுமையான நாத்திகன் என்றும்பெரியார் தொண்டன் தோற்கக்கூடாது என்றும் கூறுவார் பேராசிரியர் நன்னன். அதை அவரின் இறப்பிலும் நிலைநாட்டிவிட்டார் பார்வதி அம்மா என்று இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.