களவு போன நிஜங்கள்
உளவறிந்துக் கூறியது
உள்ளத்தில் உள்ளதை
உளவாளியாகி என்மனது !
களவுப் போனதை
கண்டறிந்து உரைத்தது
கரைந்த நிஜங்களை !
நிழலான நினைவுகள்
நிறமில்லா மலரானது
நிலவில்லா வானமானது !
நிகழ்வுகளின் சுவடுகளும்
நினைவில் நிற்காமல்
நிரந்தரமாய் மறைந்தது !
தமிழனின் தன்மானம்
தரமற்ற பொருளானது
தரைமட்ட நிலையானது !
கட்டிக்காத்த பண்பாடும்
கலைந்த ஓவியமானது
களையிழந்த முகமானது !
உணர்வுகள் உயிரிழந்து
உண்மை உருக்குலைந்து
உச்சத்தில் பொய்யின்று !
கள்ளத்தனம் உள்ளத்தில்
கபடம் அரசியல்களத்தில்
கருநாகங்கள் கண்ணெதிரில் !
சுயமரியாதை சுடுகாட்டில்
பகுத்தறிவு பள்ளத்தாக்கில்
தமிழுணர்வும் தத்தளிப்பில் !
மீண்டிடுமா இவையாவும்
திரும்பிடுமா பழங்காலம்
திருந்திடுமா திருநாடும்
மகிழ்ந்திடுமா நம்மனதும் !
பழனி குமார்