பாலியல் தொந்தரவுகளில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க பள்ளிகளில் புதிய பாடத் திட்டம் மேற்கு வங்க மாநில அரசு முடிவு

பாலியல் தொந்தரவுகளிலிருந்து பெண் குழந்தைகளைக் காக்கும் பொருட்டு பள்ளிகளில் பாடத் திட்டத்தைக் கொண்டு வர மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இதுபோன்ற பாடத்திட்டத்தைக் கொண்டு வந்து பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் எது என்பதை தெளிவாக விளக்கும் விதமாக இந்தப் பாடத் திட்டம் அமையும் என்று மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைக் காக்கும் சட்டம் (போஸ்கோ) 2012-ன் சில முக்கிய அம்சங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்கவும் மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது.

அரசு நடத்தும் பள்ளிகளில் துவக்கக் கல்வி பயிலும் பெண் குழந்தைகளிடையே சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் விதமாக அவர்களுக்கு பாலியல் தொந்தரவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. பெண் குழந்தைகளை மற்றவர்கள் தொடும்போது நல்ல தொடுதல் எது, தீய தொடுதல் எது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படும் என்று தெரிகிறது.

சமீபத்தில் கொல்கத்தாவிலுள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் ஒரு பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்டு பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக பாடத்திட்ட மறுசீரமைப்புக் குழுத் தலைவர் அவிக் மஜும்தார் ‘தி ஹிந்து’விடம் கூறும்போது, “இந்தப் பாடத் திட்டங்கள் முதலாம் வகுப்பில் இருந்தே கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. போஸ்கோ சட்டம் குறித்து பெண் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல முடியாது. எனவே அவர்களுக்கு நல்ல தொடுதல் எது, தீய தொடுதல் எது என்பதை எடுத்துச் சொல்லும் வகையில் பாடங்கள் இருக்கும். மேலும் குழந்தைகளுடன் பேசி புரியவைப்போம். இந்தத் திட்டங்கள் குறித்து டிசம்பர் இறுதியில் அறிவிப்பு வெளியிடுவோம்” என்றார்

தொடர்புடையவை

எழுதியவர் : (12-Dec-17, 4:37 pm)
பார்வை : 61

மேலே