தமிழாசிரியர்களே நன்னனின் வாழ்வு நல்வழியாகட்டும்

இதழ்கள், தொலைக்காட்சி, இணையம் என்று தமக்கு வாய்த்த ஊடகங்களில் எல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களையும் அதன் சீரிய இலக்கணச் சிறப்பையும் இளம் தலைமுறையினரிடம் கொண்டுசேர்த்துவந்த புலவர் மா.நன்னனின் மறைவு தமிழ் உலகம் கண்டிருக்கும் பேரிழப்பு. பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே தமிழைப் படிக்கும் நிலை ஏற்பட்டு, மொழிவளர்ச்சி தடைபட்டு நிற்கும் நமது காலத்தில், அவரது வாழ்வும் பணிகளும் நமக்கு ஒரு பாடம்.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கியவர் புலவர் மா.நன்னன். பழந்தமிழ் இலக்கண நூல்களிலும் இலக்கிய நூல்களிலும் ஆழங்கால் பட்டவர்களே தமிழாசிரியர்களாக இருந்த காலகட்டத்தில் உருவானவர் அவர். இலக்கண நூல்களின் சூத்திரங்களையும் ஆயிரக்கணக்கான செய்யுள் களையும் நினைவில் பதியவைத்திருந்த வியப்புக்குரிய தமிழாசிரியர் மரபின் தொடர்ச்சி அவர். 1950-கள் தொடங்கி, தனித்தமிழ் இயக்கம் பண்பாட்டுத் துறையிலும் திராவிட இயக்கம் அரசியல் துறையிலும் ஒன்றுக்கொன்று இணையாகச் செயல் பட்டுவந்தன. தமிழ் படித்தோர் தனித்தமிழின் மீதான ஆர்வத்தோடும் திராவிட இயக்க உணர்வோடும் வார்த்தெடுக்கப்பட்டார்கள்.

கல்வித் துறைகளில் அவர்கள் காலடி எடுத்துவைத்தபோது, தமிழியல் துறைக்கு மொழிப் புலமையும் அர்ப்பணிப்பும் நிறைந்த ஆசிரியர்கள் நமக்கு வாய்த்தார்கள். அவர்கள் வகுப் பறையில் வெறும் பாடங்களை மட்டும் நடத்தவில்லை; பழந்தமிழ் இலக்கியங்களோடு பரிச்சயத்தை உண்டாக்கினார்கள். தமிழ் உணர்வை விதைத்தார்கள். தமிழ்க் கலாச்சாரத்தையும் தமிழ் வாழ்வையும் போதித்தார்கள். சாதி, மத வரையறைகளைத் தாண்டி தமிழால் ஒன்றிணையும் உணர்வை வளர்த்தெடுத்தார்கள். தங்கள் கல்விப் பணியை வகுப்பறைகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ஏடுகள், மேடைகள் என்று வெகுமக்களை நோக்கியும் நம் மொழிச் சிறப்பை எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ் இலக்கியங்கள் சாதி காக்கும் இலக்கியங்கள், தமிழ் மொழி சாதி காக்கும் மொழி என்று தமிழறிஞர்களின் மீது மிகக் கடுமையாக வார்த்தைகளில் விமர்சித்த பெரியாரின் கருத்துகளைத் தமிழ் படித்தவர்களே முன்னின்று பரப்பினார்கள்; அப்படியான சூழலையும் மாற்றினார்கள். புலவர் மா.நன்னன் அந்த மரபில் வந்தவர். தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி தமிழைப் பிழையறப் பேசவும் எழுதவும் விரும்பிய அனைவருக்கும் பல்வேறு ஊடகங்களின் வழியாக நன்னன் ஆற்றிய தமிழ்ப் பணிகள் வழிகாட்டியாக இருந்தன.

இறுதி நாட்கள் வரை தமிழைச் சுமந்து நடந்தவர் நன்னன். நம் சமூகத்தில் தமிழ் ஆசிரியர்களுக்கு இருந்த பெருமதிப்பு குலைந்துவரும் இந்நாட்களில், நன்னனின் வாழ்வு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களின் பலமும் இல்லாமல், நவீன இலக்கியங்களின் பரிச்சயமும் போதிய அளவு இல்லாமல் தடுமாறும் தமிழ் ஆசிரியர் சமூகம், தமிழ்ப் பணியை வாழ்வெனக் கொள்வதற்கு நன்னனை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் வழியாகத் தமிழ் வளர்த்த பணி நன்னனோடு முடிந்துவிடக் கூடாது. நன்னனுக்கான இடத்தில் நூறு நன்னன்கள் உருவாக வேண்டும். அதுதான் நன்னனுக்கான சிறந்த அஞ்சலியாக அமையும்!
தி தமிழ் ஹிந்து

எழுதியவர் : (14-Dec-17, 4:36 pm)
பார்வை : 199

மேலே