வாழிய பாரத மணித்திரு நாடு

பாரத மணித்திரு நாடே –எங்கள்
பாரதியை நீ அன்றும் மதிக்கவில்லை
இன்றும் நீ போற்றவில்லை!
உன் அடிமை விலங்கை ஒடிக்கத்தானே
அன்று ஓடி ஓடி உழைத்தான்.
தன் உதிரத்தில் எழுதுகோலை நனைத்தான்
தன் உள்ளத்தின் உணர்வுகளைக் கொட்டி
கவிதைகள் எழுதினான்.
உறங்கிக் கிடந்த உறவுகளைத்
தட்டி எழுப்பினான்.
உண்ணாமலே அவன் கிடந்தான்-ஆனால்
உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிக் கொண்டே கிடந்தான்.
அனல் பறக்கும் கவிதை வரிகளால்
அடிமை விலங்கை எரித்திடத் துடித்தான்
அப்படிப்பட்ட மா கவிஞனை வறுமையில்
அன்று நீ தள்ளிவிட்டாயே.
பாரதி பயந்தவனல்ல !
எமனையே எட்டி உதைக்கிறேன்
என்றல்லாவா மிரட்டிக் கொண்டிருந்தான்.
துடிக்கும் மீசையோடு
மிடுக்குநடை போட்டவன் எங்கள் பாரதி !
தமிழ் பாட்டுக்கெல்லாம் அவன்
சாரதியாக இருந்தான்.
தமிழ் பாட்டெழுதியதால் அவன்
தள்ளி வைக்கப்பட்டானோ ?
அவன் பாட்டின் பின்னால் அணிவகுத்த கூட்டம்
அவன் பாடையின் பின்னால் அன்று
அணிவகுத்த மறந்ததும் ஏனோ ?
அவன் யானையால் மிதிபட்டு இறந்தான்
என்பதனை நாங்கள் நம்பத் தயாராக இல்லை...
பாரதமே ! உன் அலட்சியம் தான்
அவன் மரணத்துக் காரணம் என்று குற்றம்
சாட்டுகிறேன் !
பாருக்குள்ளே நல்ல நாடு –எங்கள்
பாரத நாடு என்று புகழ்ந்தவனை –நீ
புழுதியில் தள்ளிவிட்டாயே.....
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆனந்தக் கூட்டாடியவனை நீ
அரவணைக்க மறந்து விட்டாயே....
நீ பிரிந்து கிடந்ததைக் கண்டு கண்கலங்கி
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
என்று எச்சரிக்கைச் செய்தவனை –நீ
ஏங்க வைத்து விட்டாயே பாரதமே !
எங்கள் பாட்டுக் கோட்டையை
கட்டப் பொம்மனின் மண் கோட்டை போல்
ஆக்கி விட்டாயே ! ஒரு வேளை அவன்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே –இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே –என்று
பாடியதால் நீ கோபம் கொண்டு விட்டாயோ?
என்ற ஐயம் எழுகிறது பாரதமே..
அவன் சாதியில் பிறந்தாலும் –ஒரு
சாதி சார்ந்தவன் அல்லன்.. சாதியை மறந்து சாதிக்க நினைத்தவன்.
ஒரு மதத்தில் பிறந்தாலும் –அந்த
மதத்திற்கு மட்டுமே அடிமைப் பட்டவன் அல்லன்...
தமிழகத்தில் பிறந்தாலும் அவன்
பாட்டுக்களில் நிறைந்து கிடப்பது
பாரதத்து மக்களின் உணர்வுகள் தான்.
அனைவரையும் ஒன்றாக்கி -
ஒரே முகமாகப் பார்த்தவன்
அஞ்சிக் கிடந்தவரை பாட்டின் சாட்டை
அடிகளால் அடித்து திருத்தியவன்.
தேசத்துக்காய் பாடியவனை –தேச
ஒன்றுமைக்காகப் பாடியவனை
தமிழகம் தாண்டி யாருமே போற்றவில்லையே..
என்று எண்ணும் போது மனம்
வேதனைப் படுகிறது....
பாட்டாளிகளே கூட்டாளிகளே நமது
பாரதியின் புகழ் பட்டொளி வீசி பறக்க வேண்டாமா?
அவன் பாட்டெல்லாம் பாரத மைந்தரிகளின்
காதுகளைத் தீண்ட வேண்டாமா ?
எல்லோரும் இணைந்து
ஒன்றாய் குரல் கொடுப்போம்.... பாரதியை
‘தேசிய கவி ஆக்குங்கள்’ என்று...
பாரதமே! எம் பாரதியின் வீர வரிகளை-உன்
உள்ளத்தில் ஏற்றிக் கொள் !
அவன் முண்டாசை எடுத்து –உன்
நெற்றியில் திலகமாக ஒட்டிக் கொள் !
எதிர்காலங்களில் பாரதி விழாக்களை
பாரதமே நீயும் கொண்டாடு........

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (19-Dec-17, 9:47 pm)
பார்வை : 501

மேலே