ஞானத்தோடே ஞாலத்தில் உலவு
சகோதரனொருவன் இரத்தம் சிந்திக் கொண்டிருக்க,
நானோ காதல் மடல் வரைகிறேன்.
சகோதரியொருத்தி மீளாத்துயரில் துடிக்க,
நானோ என்னவளின் இடைப்பற்றியே ஏங்கி கவிதைப் பாடிக் கொண்டிருக்கிறேன்.
மனம் சுருங்கி இழுக்கில் வாழும் நான் என்று தான் கண் விழிப்பேனோ?
கனியிதழ்களை மறந்து கடமை புரிய விரைந்து வருவேனோ?
எழுதியதையெல்லாம் திருப்பி படிக்க எனக்கே வெட்கம்!
இவ்வளவு கசடுகளை மனதில் கொண்டு துன்மார்க்கனாய் வாழ்கிறேனே!
எனக்குக்கொரு சாவும் வராதோ?
மனித சந்ததியும் திருந்தி வாழ நல்ல சேதிகளும் பிறக்காதோ?
துண்டுபட்ட மனிதர்களே!
உணருங்கள்.
குடித்துக் கொண்டே குடிக்காதே என்பவனாய் அல்லாமல், உங்கள் முதுகைக் கொஞ்சம் திருப்பிப் பாருங்கள்!
எவ்வளவோ அழுக்கு!
அத்தனையும் நோய்!
சுயநலம்,பேராசை எண்ணங்களால் அழைந்து திரிந்து கொண்டு மற்றவர்களுடைய குற்றங்களை எடுத்துரைத்தாலே,
எய்த அன்பே தன்னை நோக்கி வருமென்பதை அறியாத மூடர்களாய்
பாவங்களில் புதைந்து நரகில் வாழ்கிறீர்களே..
மன மாற்றம் வேண்டும்.
தீயன விடுத்து நல்லன புகுதல் வேண்டும்..
அறிவென்பது பிறரை ஏமாற்ற அல்ல.
கவிதையென்பது பெண்ணழகைப் பாட மட்டும் அல்ல.
அறிவுமிகு நற்செயல்கள் பழகு.
ஞனத்தோடே ஞாலத்தில் உலவு..