உள்ளொன்றும் புறமொன்றும்
நேர்மையாய் வாழும் உள்ளம்
நிச்சயம் உலகை வெல்லும்
தீவினை செய்யும் நெஞ்சம்
சீக்கிரம் பொசுங்கிப் போகும்
மனிதராய் பிறந்து விட்டு
விலங்காக வாழ்தல் ஏனோ?
விலங்குகள் புனிதத்தை மனிதன்
விளங்காமல் கெடுத்தல் ஏனோ?
சொல்லிடும் வார்த்தை எல்லாம்
மெய்மட்டும் இருத்தல் வேண்டும்
கிள்ளிடும் சொற்கள் கூட
அன்பூற்றி நிரப்ப வேண்டும்
இதயத்தில் தீதை வைத்து
இன்முகத்தை புறத்தில் வைத்து
அகத்தினில் அழுக்கை வைத்து
பொய்யுரைத்தல் தவறு தானே!
சிரிப்பதாய் காட்டிக் கொண்டு
சிக்கலைத் தருதல் நன்றா?
கைகொடுப்பதாய் நடித்துக் கொண்டு
தீக்குழியினில் புதைத்தல் நன்றா?
உள்ளத்தின் வார்த்தை எல்லாம்
உண்மையாய் மட்டும் இருக்க
இன்பமாய் உலகம் இருக்கும்
இனிமையே எவர்க்கும் நடக்கும்