கண்ட நாள் முதலாய்-பகுதி-36

....கண்ட நாள் முதலாய்....

பகுதி : 36

புதிய வீட்டில் அவர்களது வாழ்க்கையைத் தொடங்கி இன்றோடு ஒரு மாதமாகின்றது...இந்த ஒரு மாத காலத்தில் அவர்களது வாழ்க்கையிலும் பல்வேறான மாற்றங்கள்...துளசியின் உள்ளத்தையும் இந்த இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான் அரவிந்தன்...

காலையில் அவனுடனேயே சென்று பல்கலையில் இறங்கிக் கொள்பவள்,மாலையிலும் அவனுடனேயே வீடு திரும்புவதை வழக்கமாகிக் கொண்டாள்...அவனால் வர முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் பேரூந்தில் வந்து விடுவாள்...அவளது மேற்படிப்புக்கான வகுப்புகளும் ஆரம்பித்திருந்ததால்,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் அவனுடனேயேதான் சென்று வருவாள்...

வீட்டைப் பராமரிப்பதிலிருந்து சமையல் வரை அனைத்து வேலைகளையுமே இருவருமாய் பகிர்ந்து செய்பவர்கள்,மூன்று வேளை உணவினையும் ஒன்றாக அமர்ந்து உண்பதையே பழக்கப்படுத்திக் கொண்டார்கள்...மற்றைய வேளைகளில் தனித்தனியாக உணவருந்த வேண்டிய சூழல் அமைந்தாலுமே இரவு வேளை உணவினை மட்டும் அவர்கள் இருவருமே தவற விடுவதில்லை..

சாப்பிடும் போது கதைத்துக் கொள்ளக் கூடாதென்ற நியதி இருந்தாலும்...அன்றைய நாளின் சாராம்சத்தை ஒருவருக்கிடையே ஒருவர் பகிர்ந்து கொள்வது இரவு உணவு வேளையின் போதுதான்...அதனாலேயே எவ்வளவு வேலையிருந்தாலும் அந்த நேரத்திற்குச் சரியாக இருவருமே உணவு மேசையில் ஆஜராகி விடுவார்கள்...

சனி,மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் துளசியின் வகுப்புக்கள் முடிந்ததும் இருவரது வீடுகளிற்கும் சென்று வருபவர்கள்...கிடைக்கும் நேரத்தில் வெளியிலும் எங்கேயாவது சென்று வருவார்கள்...இந்த வாழ்க்கை முறை அவர்கள் இருவருக்குமே பிடித்திருந்தது....இடைவெளிகள் குறைந்து இருவருமே நெருக்கமாகிக் கொண்டே வந்தார்கள்....நட்பென்ற உணர்வைத் தாண்டி அதற்கும் மேலான உணர்வொன்று அவர்களுக்கிடையே இழையோடத் தொடங்கியிருந்தது....அதை அவர்களிருவருமே உணர்ந்துதான் இருந்தார்கள்...ஆனாலும் வெளியில் காட்டிக் கொண்டதில்லை...

அன்றைய சனிக்கிழமையின் விடியல் இருவருக்குமே அழகாக விடிந்தது...அரவிந்தன் வேலை சம்மந்தமான மீட்டிங் ஒன்றிற்காக காலையிலேயே கிளம்பிவிட...அவள் மட்டுமேதான் வீட்டினில் தனித்து இருந்தாள்...அவளுக்கான வகுப்புகளும் அன்று இல்லாததால் தோட்டத்தில் இறங்கி புதிதாக வேண்டிய பூச்செடிகளை நட்டு அழகு பார்த்தவள்,தேநீரும் பத்திரிகையுமாக வெளியில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் வந்து அமர்ந்து கொண்டாள்....

மெல்லமாக ஊஞ்சலில் ஆடியவாறே தேநீரைச் சுவைக்கத் தொடங்கியவளுக்கு...வீட்டில் குடியேறி இரண்டாம் நாள் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் அவளின் மனக்கண்ணில் காட்சிகளாக விரிந்தது...

முதல்நாள் பால் காய்ச்சி குடியேறியவர்கள்,மறுநாள் வீட்டிற்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள்...துளசி காரிலிருந்து இறங்கவுமே அவளது கண்களிரண்டையும் பொத்திக் கொண்டான் அரவிந்தன்...

"ஹைய்யோ அரவிந்தன்...என்ன பண்ணுறீங்க...??.."

"ம்ம்...பார்த்தா எப்படித் தெரியுதாம் மேடம்...??.."

"அதான் பார்க்க விடாம கண்ணு ரெண்டையும் பொத்தி வைச்சிருக்கீங்களே...அப்புறம் எப்படிப் பார்க்கிறதாம் அரவிந்தன்...??..."

கதைத்துக் கொண்டே அவளை சிறிது தூரம் நடத்திக் கூட்டி வந்தவன்,

"ம்ம்...இப்படித்தான் பார்க்கிறதாம் மிஸஸ் துளசி அரவிந்தன்..."என்றவாறே இரு கரங்களையும் அவளது கண்களிலிருந்து எடுத்துக் கொண்டான்...

அவனது கைகள் விலகியதுமே தன் எதிரில் இருந்ததைப் பார்த்தவளுக்கு விழிகளிரண்டும் பெரிதாக விரிந்தது...முகமெங்கும் புன்னகை பூக்க அரவிந்தனைத் திரும்பிப் பார்த்தவள்,எதிரில் இருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள்...

"இதை எப்போ வாங்கினீங்க அரவிந்தன்...??..."

"இன்னைக்குத்தான்...."

"இன்னைக்கா...?.."என்று முதலில் திகைத்தவள்,பின்..

"ஓஓஓ....சாமான் வாங்கும் போது சேருக்கு வந்த அவசர அழைப்பு இதுதானா...??..."என்று தலையைச் சரித்து அவனிடம் கேட்டவள்,அவனது மெச்சுதலான புன் சிரிப்பிலேயே அதுதான் என்பதையும் புரிந்து கொண்டாள்...

"தாங்யூ சோ சோ மச் அரவிந்தன்...நான் இதை எதிர்பார்க்கவேயில்லை....நான் எவ்வளவு சந்தோசமாக இருக்கேன் தெரியுமா...??..."என்று ஓர் குழந்தை போலே சொல்பவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்,ஊஞ்சலை ஆட்டி விட்டவாறே அவளின் பின்புறமாய் திரும்பி அவளுக்குச் சற்று நெருக்கமாய் அமர்ந்து கொண்டான்...

அவளது காதின் ஓரமாய் குனிந்து கொண்டவன்,

"பிடிச்சிருக்கா....??..."என்று கேட்டான்...

அன்று அவள் இருந்த சந்தோசத்தில் அவனது குரலில் இருந்த மயக்கத்தைக் கவனிக்கவில்லை...அதனால் அதே குதூகலத்தோடே,

"இதென்ன கேள்வி...எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அரவிந்தன்..."என்றவாறே அவனைத் திரும்பிப் பார்த்தவள்,அப்போதுதான் அவனின் கண்களில் தெரிந்த மயக்கத்தினைக் கண்டு கொண்டாள்...

மிக அருகில் தெரிந்த அவன் முகத்தினை நேர் கொண்டு பார்க்க முடியாமல் நாணம் வந்து அவளைக் கட்டிக் கொள்ள,தலையைக் குனிந்து விரல்களைப் பிசையத் தொடங்கியவள்,
அவளுக்கே கேட்காத குரலில்..

"நான் ஊஞ்சலைச் சொன்னேன்..."என்று சேர்த்துச் சொன்னாள்...

அவளது தடுமாற்றமான பதிலில் அவளுக்கு மட்டுமே தெரியும்படியாக புன்னகைத்துக் கொண்டவன்,

"நான் கூட ஊஞ்சலைத்தான் கேட்டேன்...நீ என்ன நினைச்ச துளசி...??.."என்று கண்களில் சிரிப்போடு அன்று கேட்டவனை இன்று நினைத்துப் பார்க்கையிலும் அவளுள் நாணமும் புன்னகையும் ஒரு சேரத் தோன்றியது...

அன்றைய நாளின் நினைவில் மனதிற்குள்ளேயே அவனைக் "கள்ளன்"என்று சொல்லிப் புன்னகைத்துக் கொண்டவள்,உள்ளே அலறிய தொலைபேசியின் சத்தத்தில் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டுக் கொண்டாள்...

அலைபேசியில் புது இலக்கம் தெரியவும் காதினில் வைத்து அவள் "ஹலோ.."என்று சொல்லவும் மறுபக்கத்திலிருந்து பவி பொரிந்து தள்ளிவிட்டாள்...

"எங்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கா மேடம்...??.."

அவளது குரலையும் கேலியையும் வைத்தே பவிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள்,

"ஹேய் பவி...நீயா??என்ன புது இலக்கத்திலிருந்து கூப்பிடுற..."துளசியின்வாயே அவளுக்கு எதிரியாகிப் போனது...அவள் அப்படிக் கேட்டதும்தான் தாமதம் மறுமுனையில் இருந்த பவியோ மேலும் பொங்கியெழுந்து விட்டாள்...

"அடிப்பாவி...நீயெல்லாம் ஒரு ப்ரெண்டா..??.."

"என்னடி பவி இப்படிக் கேட்டுட்ட...என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா நீ...??..."என்று நாடக பாணியில் பேசி ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த பவியின் மனதில் எண்ணையை ஊற்றினாள் துளசி...

"உன்னைத்தான் கேட்குறேன்....பதிலைச் சொல்லு...நாங்கெல்லாம் உன் நினைப்பில இருந்தாதானே எங்க போன் நம்பர் எல்லாம் போன்ல சேவ் பண்ணி வைக்கணும்னு தோனும்...."

அவள் அப்படிக் கேட்டதும்தான் துளசிக்கும்,அவள் தனது திருமணத்தன்று அழைத்ததும்..புதிய இலக்கத்தை குறித்து வைக்குமாறு உரைத்ததும் நினைவிற்கே வந்தது...

"ஹேய் பவி...ரொம்ப சொரிடி...அன்னைக்கு அங்கயிருந்து கிளம்புற அவசரத்தில சேவ் பண்ணவே மறந்திட்டேன்...அதான் கண்டுபிடிக்க முடியலை...அதுக்கின்னு உன்னை மறந்திட்டதா அர்த்தமா...??.."

"இந்த பேச்சுக்கொன்னும் குறைச்சலில்லை...நான் உன் மேல கடும் கோபத்தில இருக்கன்..."

பவி கோபத்தின் உச்சியில் நின்று கொண்டு இறங்குவேனா என்று அடம்பிடிக்க,அவளைத் தஜா செய்து சமாதானப்படுத்துவற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது துளசிக்கு..

அதன் பின் ஒரு மாத காலக் கதையையும் ஒன்று விடாது மணிக்கணக்காக இருவருமே பேசி முடித்தார்கள்...துளசியின் பேச்சில் அதிகமாக அரவிந்தனே நிறைந்திருந்ததில் பவி மிகவும் சந்தோசப்பட்டுப் போனாள்...அவள் வாழ்க்கை இனிச் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவளின் நலம் விரும்பிய நண்பியாக அவள் மனம் நிறைந்தது...

"அப்புறம் இங்க வாறதா ஏதும் பிளான் இருக்கா...??..."

"ம்ம்...இரண்டு அல்லது மூனு மாசத்தில வருவேன் துளசி...என்னோட சான்றிதழ்கள் கொஞ்சம் பல்கலைக்கழகத்தில் எடுக்கனும்...எப்படியும் ஒரு கிழமை நிற்கிற மாதிரி வருவன்...உன் ஆளை வேற நான் பார்க்கனும் ல...??..."

அவள் சொன்ன முன் பாதியில் சந்தோசப்பட்டுப் போனவள்...இறுதியாக அவள் கூறியதைக் கேட்டதும் கடுப்பாகிவிட்டாள்...

"நீ எதுக்குடி என் ஆளைப் பார்க்குற...??.."

"அட பார்றா கோபத்தை....உன் ஆளை நாங்க ஒன்னும் தூக்கிட்டுப் போக மாட்டம்...எல்லாவிதத்திலையும் உனக்குப் பொருத்தமான்னு பார்க்கத்தான்.."

"அதெல்லாம் நாங்களே பார்த்துக்குறோம்...நீ ஒன்னும் பார்க்க வேண்டாம்..."

"ஆனாலும் உனக்கு இவ்வளவு பொறாமை ஆகாதடி...உன் ஹஸ்பென்ட் எனக்கு அண்ணா மாதிரிடி..."

"அதென்ன மாதிரி,அண்ணான்னே சொல்லு..."

"ம்க்கும் சொல்லிட்டாலும்..இப்படி உன்னை காதல் கடலில் மூழ்கடித்த அந்த காதல் மன்னனை நான் பார்த்தே ஆகனுமே..."

"நாங்க ஒன்னும் இங்க காதல்ல மூழ்கல..."என்று அவள் கோபமாகச் சொல்ல முயன்றாலும் அவளது குரல் என்னவோ கிசுகிசுப்பாகத்தான் வந்தது...

அதை அறிந்து கொண்ட பவியும் தனக்குள்ளேயே புன்னகைத்தவாறு பாடலொன்றைப் பாடி துளசியை மேலும் சிவக்கச் செய்துவிட்டு,அத்தோடு அழைப்பினையும் முடித்துக் கொண்டாள்...

"....சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு 
நெஞ்சிலே உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு 
வெட்கத்தில் வந்து அவன் பேரை சொல்லடி மெதுவா 
சட்டென்று தொட்ட அவனோடு எண்ணம் உன் கனவா 
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ 
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ...??..."

அவளின் பாடலை தனக்குள் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டவள்,தன் மனதைக் கொள்ளையடித்த திருடனின் புகைப்படத்தைக் கையிலெடுத்து அவன் நெற்றியில் இதழ் முத்திரையை பதித்துக் கொண்டாள்...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (29-Dec-17, 7:44 pm)
பார்வை : 595

மேலே