எதுக்குடா சாதி உனக்கு
சாதி சாதி சாதியென்று
அலையும் மனிதனே!
உன்இடுப்பு வேட்டி அவுந்து
கிடக்கு பாரு முதலிலே!
உன்னையும் என்னையும் மோதவிட்டு
ஒருத்தன் வாழுறான்!
அவன் மசுரைத் தொடவும் மனமில்லாமல்
உயிரை வாங்குற!
எங்களோட உயிரை வாங்குற!
ஆண்டசாதி என்ற பெருமை
உனக்கு எதுக்கய்யா! இங்கே!
நீயுமொரு அடிமை சாதி
நினைவில் இல்லையா?
மனுதர்மம் படிக்க வில்லையா?
உங்கள் வீட்டில் அடுப்பெரிக்க
விறகு அடுக்கினோம்!
கொல்லையில விறகு அடுக்கினோம்!
நீ!
எங்கவீட்டு கூரை யெரித்து
குளிரு காயுர!
சாதிவெறி சேற்றில் புரளுற!
செருப்புக் காலில் நடப்பதற்கு
தடைகள் போடுற!
உன்தெருவின் வழியை மறிக்கிற!
கோவில் கருவறைக்குள் காலை
வைக்க! அஞ்சி ஓடுற!
அலறியடித்து! அஞ்சி ஓடுற!
நீயும் நானும் மனிதசாதி
மறந்து போனியே!
மதத்துல மதியிழந்து போனியே!
நம்மை அடக்குகின்ற அற்பனுக்கு
பணிஞ்சு போறியே!
அடிபணிஞ்சு போறியே!
கொதிக்கிற தண்ணீர்
நீயென்று தெரியும்!
கவலையில்லை அதனால்!
அடுப்பெரிக்கிற கொல்லி
யாரென்று புரியும்!
பயமுமில்லை அதனால்!
எரியுற கொல்லியை
பிடுங்கி எறிகையில் தானடா!
விடுதலையே பிறக்கும்!
நமக்கு விடுதலையே பிறக்கும்!
-- தல்லிதாசன்