கடவுளின் மனசாட்சி பேசியது

உலகைப் படைக்கும் போதே ஏழை, பணக்காரனென்று படைத்தேனா?

உயிரணுக்களில் எந்த பாகுபாட்டையும் நான் படைக்கவில்லையே.
படைத்துக் கொண்டவர்கள் நீங்களே.

இயற்கையென்னும் அமுதச் சுரப்பியை வரமாய் படைத்தேன்.
இயற்கையைச் சுரண்டி வியாபாரம் செய்தீர்கள்.
பணம் செய்தீர்கள்.
ஏழை, பணக்காரன் என்னும் பாகுபாடுகளை உருவாக்கிக் கொண்டீர்கள்.

ஆச்சாரம், குலப்பெருமையென்று கதை கட்டுகிறீர்கள் தாய், தந்தையாகிய என்னை மறந்து.

வழக்கங்களெல்லாம் நீங்கள் உருவாக்கிக் கொண்டவை.
பழி மட்டும் என் மீதா?

அன்பை மறந்து அரக்கத்தனம் புக காட்டுமிராண்டிகளாய் உங்களுக்குள்ளே சண்டைகள் போடுகிறீர்கள்.
கருணை, அகிம்சை, ஒழுக்கம் மறுத்து கோலைகள் புரிகிறீர்கள்.
பண்றதெல்லாம் பண்ணிவிட்டு நான் தான் காரணமென்கிறீர்கள்.

என் பெயரில் எத்தனை பொய்யர்கள்?
எத்தனை இடைத்தரகர்கள்?

கொடியவன் காவி அணிந்தால், காவியைக் கண்டதும் காலில் விழும் கூட்டங்களே!
எல்லா நிறங்களிலும் நான் இருக்கிறேனென்று அறிவீர்களா?

தீர்வுகளைக் காணாமல் பிரச்சனைகளை மேலும் மேலும் உற்பத்தி செய்து கொண்டே நிம்மதியே இல்லாமல் படைத்த கடவுள் எனக்கு வேண்டாம் என்கிறீர்கள் உங்கள் சுவாசமாக, இதயத்துடிப்பாக நான் உள்ளதை அறியாமல்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Jan-18, 6:30 pm)
பார்வை : 931

மேலே