“ஏற்காடு ஏற்பாடு” – கட்டுரை

நான் பணிபுரியும் அலுவலகத்தில், உள்ள நண்பர்களோடு சேர்ந்து எங்கேனும் வெளிய சுற்றுலா செல்ல வேண்டுமென்பது எனது நீண்ட நாள் விருப்பம். அதற்காக தொடர் விடுமுறை எப்போழுது கிடைக்கும் என்று காத்திருந்தேன். ஏப்ரல் மாதம் அப்படியொரு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. எனவே நண்பர்களோடு விவாதித்து, ஒருவழியாக நாங்கள் பதிநான்கு பேர் சேர்ந்து ஒரு வாகனம் ஏற்பாடு செய்து, இரண்டு நாள் ஏற்காடு சுற்றுலா சென்று வருவது, என்று முடிவானது.
இது எங்கள் முதல் சுற்றுலா. இந்த காரியம் கைகூடவே எங்களுக்கு இரண்டு வருடம் பிடித்தது. நானும் சென்னையை விட்டு அவ்வளவாக வெளியூர் சென்றதில்லை. சுற்றுலாவிற்கு முடிவு செய்தவுடன் கூகுள் வரைபடத்தில் ஏற்காட்டை இரண்டு மூன்று தடவை சுற்றி வந்து அலசி விட்டோம். குறைந்த அளவு பணமே கையில் இருந்தது. இருந்தாலும் ரொம்ப நாள் கனவு நிறைவடைகிற மகிழ்ச்சியில் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம், என்ற நினைப்பில் அனைவரும் பூந்தமல்லியில் இருந்து இரவு ஒரு பத்து மணிக்கு கிளம்பினோம்.
திட்டம் போட்டது பதிநான்கு பேர் என்றாலும், வழக்கம் போல் வந்தது பன்னிரெண்டு பேர்தான். வாகனம் கிளம்பியவுடன் எனது முகப்புத்தகத்தில் நான் இட்ட பதிவு, வெரும் இரண்டே வார்த்தைதான், அஃது “இலக்கு ஏற்காடு”. நள்ளிரவில் பெங்களூர் நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக்கொண்டு இருக்கும் அந்த பாட்ஷா வாகனத்தில் யாரும் தூங்கவில்லை. நன்கு சத்தமாக ஆலுமா டோலுமா பாட்டு ஒலித்துக்கொண்டு இருக்க, என் நண்பன் அரை போதையில் எழுந்து நடனமாட, விசில் சத்தங்களும், கத்தலுமாக ஒரே கொண்டாட்டம்தான்.
பின்சீட்டில் அமர்ந்திருந்த இன்னொருவன் அவன் கைபேசியில் ‘டிராவெலிங்க் டு ஏற்காடு’ என முகப்புத்தகத்தில் பதிவிட்டு எங்கள் அனைவரையும் டேக் செய்ய, என் கைபேசிக்கு டேக் செய்த தகவல் வந்தது. வாகனத்தில் ஏறும்போதே போகும் வழியில் ஆம்பூரில் நள்ளிரவு பிரியாணி சாப்பிட வேண்டுமென, என் நண்பர்களை போட்டு நச்சரித்தேன். அவர்களும் என் இம்சை தங்காமல் ஒத்துக்கொண்டார்கள்.
ஆம்பூரில் இரவிலும் பிரியாணி கிடைக்கும் என யாரோ கூறி கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், எங்கு தூங்கிவிட்டால் வாகனத்தை ஆம்பூரில் நிறுத்தாமல் போய்விடுவர்களோ என்ற அச்சத்தில் தூங்காமல் விழித்திருந்தேன். இருப்பினும் இரவு நேர களைப்பிலும், ஜன்னலோரம் வீசிய இதமான காற்றாலும் கண்ணயர்ந்தேன். ஆட்டம், பாட்டம் முடிந்து ஒரு பன்னிரெண்டு மணி வாக்கில் ஒரு சிலரை தவிர நானும், மற்றவர்களும் களைப்பில் தூங்கிவிட்டோம்.,
விழித்த பொழுது மணி அதிகாலை ஆறு. வாகனம் முழுவதும் குளிர்ச்சியாக இருந்தது, ஜன்னல் திரையை விளக்கி பார்த்தேன். ஆச்சர்யம்! இதுவரை சென்னை வெயிலில் காய்ந்தவனுக்கு அந்த ஈரப்பதம் உடம்பிற்கு குளிர்ச்சியாகவும், அந்த இயற்கை காட்சி கண்ணிற்கு குளிர்ச்சியாகவும் இருந்தது. வாகனம் ஏவுகனை போல சாய்ந்து மலைப்பாதையில் ஏறிக்கொண்டு இருந்தது. சிறிய பாதை, சற்றே பாதையிலிருந்து தடம் விலகினாலும் நாம் எங்கு இருப்போமோ என்றே தெரியாது போல பெரிய பள்ளம், ஜன்னலுக்கு சற்று கீழே பார்க்கவே கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது.
நினைத்தது போலவே ஆம்பூரில் வாகனம் நிற்கவில்லை. கேட்டதற்கு நான் நன்கு தூங்கியதாகவும், ஆம்பூரில் எழுப்பியதற்கு நான் எழும்பவில்லை எனவும் கூறினர். ஏமாற்றம், இருந்தாலும் பழக்கப்பட்டது தானே. இறுதியாக ஏற்காட்டை அடைந்து அதன் பேருந்து நிறுத்ததிற்கு அருகில் வந்து இறங்கினோம். அது சற்று மேடான இடம் சுற்றிலும் ரம்மியமான மலைகள், அதன் இடையில் ஒன்றாக சேர்ந்து சிறு சிறு வீடுகள்.
பின்பு சிறிது நேரத்தில் ஒரு மண்டபத்தில் தங்கி, குளியல் வேலைகளை முடித்து, ஊர் சுற்ற கிளம்பினோம். முதலில் அங்கிருந்த பூந்தோட்டத்திற்கு செல்வது என முடிவாகியது. அங்கு சென்றால் பெரிய வாகனம் என்பதால் எங்களை அனுமதிக்கவில்லை. மீண்டும் ஏமாற்றம். ஆனால் வெளியிலிருந்து பார்க்கும்பொழுது, பூக்களின் அழகு கண்ணை பறித்தது. அதன் நறுமணம் காற்றோடு கலந்து எங்களை மயக்கியது.
அதன் பின்பு அங்கிருந்து நேராக லேடீஸ் சீட் எனப்படும் இடத்திற்கு சென்றோம். “அது என்னடா லேடீஸ் சீட்?” என்ற சந்தேகம் எங்கள் எல்லாரிடமும் இருந்தது. போய் பார்த்தபின்பு தான் தெரிந்தது அது ஒரு மலையின் விளிம்பு என்று, அங்கிருந்து பார்ப்பதற்கு அந்த சுற்று வட்ட ஜில்லாவே அப்பட்டமாக தெரிந்தது! அந்த மலை விளிம்பில் நின்று மலைத்துப் போனோம். அங்கிருந்து பார்க்கும் பொழுது கடல் மட்டத்திற்கு இணையாக தரைப் பகுதியில் உள்ள மரங்கள் சிறு, சிறு பொம்மைகள் போலவும், வானத்து மேகங்கள் அருகில் மிதந்து செல்வது போலவும் இருந்தது.
அங்கு நாங்கள் கண்ட காட்சியில், தரைப்பரப்பில் உள்ள எண்ணற்ற மரங்களில் ஆங்காங்கே சில பகுதிகள் மட்டும் கருப்பு, கருப்பாக இருந்தது. ஆரம்பத்தில் அது என்ன என்று எனக்கு சற்று விளங்கவில்லை. பின்புதான் புரிந்தது அது மேலே உள்ள மேகங்களின் நிழல்கள் என்று., இதிலிருந்து நீங்கள் புரிந்துக் கொள்ளலாம் நாங்கள் எவ்வளவு உயர மலையின் விளிம்பில் நிற்கிறோமென்று. பிரம்மாண்டத்தின் உச்சமும், இயற்கையில் பேரழகும் அங்கே எங்களை வியப்படைய வைத்தது.
அங்கு நாங்கள் இருந்த பாதுகாப்பான பகுதியை தாண்டி சற்று கீழே விளிம்பில் இருந்த ஒரு பாறையில் பின் வரும் வாக்கியம், ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. வேடிக்கையாக இருந்தாலும் சற்று பயம் ஏற்படுத்துவது போலவே அவ்வாக்கியம் எழுதப்பட்டு இருந்தது. அஃது “கவனமாக நிற்கவும் ஏற்காட்டில் ஒரே ஒரு மருத்துவமனைதான் உள்ளது. ஆனால் மூன்று கல்லறைகள் உள்ளது!”. பின்பு அங்கே ஒரு சில புகைப்படங்கள், தாமி, காணொளிக்களை பதிவு செய்து விட்டு அடுத்த இடத்திற்கு கிளம்பினோம்.
அடுத்து சென்றது படகு குழாம் எனப்படும் போட்டிங், செல்லும் வழியிலேயே ஆங்காங்கே கேமராவிற்கு ஓய்வில்லாமல் என் நண்பர்கள் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டு இருந்தார்கள். அங்கு சுற்றி பார்த்ததை விட புகைப்படங்கள் எடுத்ததே அதிகம். அவ்விடமும் அழகிற்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இருந்தாலும் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு நல்ல அனுபவத்திற்காக மிதி படகில் செல்ல முடிவெடுத்தோம்.
படகிற்கான நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டு அங்கே காத்திருந்த கூட்டத்தில் எங்கள் முறைக்காக ரொம்ப நேரம் காத்திருந்தோம். காத்திருந்த நேரத்தில் அங்கே நின்றுக்கொண்டிருந்த சில பெண்களை பார்த்து நானும், எனது நண்பனும் எங்களுக்குள் ரகசியமாக கேலி பேசிக்கொண்டிருந்தோம். மிதி படகில் செல்ல எங்கள் முறை வந்தது. நாங்கள் ஒரு படகில் இரண்டு பேர் வீதம் அந்த மிதி படகுகளில் பயணித்தோம்.
நானும் எனது நண்பனும் மிதிக்கும் ஒவ்வொரு மிதிக்கும் படகு மெதுவாக நகர தண்ணீரில் நான் கையை நனைத்தபடியே பயணிக்க, ஒரு சுகமான அனுபவமாக அப்பயணம் நிறைவுற்றது. அனைத்தையும் காணோளியில் பதிவு செய்தோம். நுழைவுச்சீட்டு வாங்கும் பொழுதே அங்கு அமர்ந்திருந்த பெண், சீட்டை திருப்பிக்கொடுத்து முன்பணத்தை பெற்றுக் கொள்ளலாம், என்று கூறியதால், பயணம் முடிந்ததும் முன் பணத்தை திரும்பப் பெற்றோம்.
அடுத்து எங்கு செல்லலாம் என முடிவெடுப்பதற்க்குள், என் நண்பன் உடனடியாக “வீட்டிக்கு செல்ல வேண்டும்” என தீடிரென அவசரப்படுத்தினான். ஏன் என்று கேட்டதற்கு வீட்டில் அவசரமாக இன்றே வர சொன்னார்கள் என கூறினான். நாங்கள் எவ்வளவு கூறியும், அவனை சமாளிக்க முயற்சித்தும், அவன் கேட்காததால் இறுதியில் எல்லாரும் திரும்பிச் செல்லலாம் என முடிவானது. இது போன்ற இடத்திற்கு வருவதே வருடத்திற்கு ஒரு முறைதான்.
அதனால் இந்த சுற்றுலா இதுபோல முடிவுருவதில் மனசு சற்று கவலையுற்றது. இன்னும் அங்கே விலங்குகள் பூங்கா, ஜென்ஸ் சீட், கோயில் என பார்க்க பல இடங்களை தேர்ந்தேடுத்து வைத்ததெல்லாம் வீணானது. பின்பு மதிய உணவை அங்கு புதிதாக கட்டிய ஒரு சிறு கடையில் முடித்துவிட்டு, அரைமனதோடு வீட்டிற்கு கிளம்ப தயாரானோம். கிளம்புவதற்கு முன் அங்கே தெருவூரமாக இருந்த ஒரு இடத்தில் மலிவான விலையில் பாலாப் பழங்களை கிடைக்க, என் நண்பர்கள் அதை வாங்கி வண்டிக்கு பின்புறம் அடுக்கினர்.
மொத்தமாக அவ்விடத்திற்கு போவதற்கும், வருவதற்கும் ஆன பயண நேரம் பதினான்கு மணி நேரத்தைவிட, ஏற்காட்டில் நாங்கள் ஊர் சுற்றியது வெறும் ஐந்து மணி நேரம் மட்டுமே. வண்டி ஏக்கத்தோடு கிளம்பியது. ஏற்காட்டில் இருந்து கிளம்பி மலையிலிருந்து அந்த கொண்டை ஊசி வளைவுகள் வழியாக இறங்கும் பொது தீடிரென எங்கள் வண்டியின் பிரேக் வேலை செய்யவில்லை. பின்பு எங்கள் ஓட்டுனர் எப்படியோ சமாளித்து ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தினார்.
நாங்கள் செய்வதறியாது அங்கேயே ஒரு மணி நேரம் போக்கினோம். அப்பொழுது அங்கு வந்த மற்றொரு ஓட்டுனர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார். இங்கே இதெல்லாம் சகஜம் தான். எப்பொழுதும் மலைப்பாதையில் இறங்கும் பொழுது சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அடிக்கடி ப்ரேக் பிடித்தால், இது போன்று ப்ரேக் பேய்லியர்தான் ஆகும். சற்று நேரம் வண்டிக்கு ஓய்வு கொடுங்கள் ப்ரேக் அதுவாக சரி ஆகிவிடும்” என்று கூறினார்.
அவர் கூறியது போலவே செய்தோம். சிறிது நேரம் கழித்து வண்டியில் ப்ரேக் பிடித்தது. எங்களுக்கு அப்பொழுதான் நிம்மதி வந்தது. மீண்டும் பயணத்தை தொடங்கினோம். திரும்ப வரும் வழியில் ஒரு தாபா உணவகத்தில் இரவு உணவை முடித்து அப்படியே பயணித்து அதிகாலை ஒரு நான்கு மணியளவில் சென்னையை வந்தடைந்தோம். சுற்றுலா முடிந்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றோம். இறுதிவரை ஆம்பூர் பிரியாணி சாப்பிட முடியவில்லையே என்பதுதான் எனக்கு இன்னும் சற்று வருத்தத்தை அளித்தது.
இருந்தாலும் அந்த மலைச்சரிவில் எங்கள் வண்டியின் ப்ரேக் செயலிலந்தும் நாங்கள் உயிர் தப்பியது அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் நாங்கள் சென்று வந்த அடுத்த வாரமே எங்களைப் போன்ற ஒரு குழு ஏர்காட்டிற்கு சுற்றுலா சென்று திரும்பி இறங்கும் பொழுது வண்டியின் ப்ரேக் பிடிக்காமல், மலையில் இருந்து விழுந்து இறந்து போனார்கள். என்ற தகவல் செய்திதாளில் வந்தது.
***

“கவனமாக நிற்கவும் ஏற்காட்டில் ஒரே ஒரு மருத்துவமனைதான் உள்ளது. ஆனால் மூன்று கல்லறைகள் உள்ளது”.
-அகரன்.

எழுதியவர் : அகரன் (16-Jan-18, 2:34 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 388

சிறந்த கட்டுரைகள்

மேலே