கேட்காத ஓசை

சாதிச்சண்டை சத்தத்தில்
சாத்தப்பட்டு
சத்தமில்லாமல்போனது
சின்ன ஊர்க்கோவில்..

சாமிக்கே இல்லை பூசை,
எப்படிக் கேட்கும்
ஆலயமணி ஓசை..

மணிக்கூண்டும் மணியும்
மறைவிடமாகி
உறைவிடமாகியது பறவைகளுக்கு-
கூடு கட்டிக்
குடித்தனமும் ஆகிவிட்டது..

காலை மாலை
மணியோசை
கேட்ட இடத்தில்,
கேட்கிறது இப்போது
பறவைகள் பாடும்
பலகுரல் இசை..

பெரியவர் சிலரின்
பேச்சுவார்த்தையால்,
ஊருக்குள் வந்தது
ஒற்றுமை மீண்டும்..

கோவில் திறந்தது,
கேட்டது மணியோசை-
கேட்கவில்லை பறவையோசை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jan-18, 7:16 am)
Tanglish : ketkaatha oosai
பார்வை : 139

மேலே