உறங்கிப்போன நான்
உறங்கிப்போன நான்...
காணவில்லை...!!!
தேடவேண்டியது நபரை அல்ல,
தொலைந்து போன அடையாளங்ளை...
மீட்கவேண்டியது உடலை அல்ல..
மிஞ்சி இருக்கும் பிம்பங்களை...
சரீரம் இங்கே தனித்திருக்க,
சிந்தனை எங்கோ தொலைந்திருக்க,
நாட்கள் முழுதும் நகர்ந்திருக்க,
நினைவு மட்டும் நிலைத்திருக்க,
உறைந்து விட்ட உணர்வுகளை உருக்கிக் கொண்டிருக்கிறேன்
என்னை தேட...
புதைத்து வைத்த புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கிறேன்
என்னை மீட்க...
சிதறிப்போன சில்லுகளை சேர்த்துக் கொண்டிருக்கிறேன்
என்னை காண...
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்றோ எழுதிய என் எழுத்துகளிலும்,
என்றோ வரைந்த என் ஓவியங்களிலும்,
எங்கும் கேட்கும் ராஜா பாடல்களிலும்,
என்றும் விடியும் புதிய விடியல்களிலும்,
என்னை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
முடிவில்லாத மனித மோகங்களில் நான் மறைந்துபோகவில்லை,
சற்று மூழ்கி போய்விட்டேன்..
அர்த்தமில்லாத அற்ப ஆசைகளில் நான் தொலைந்து போகவில்லை,
சற்று தூரம் போய்விட்டேன்..
ஆம்,
கலைக்கமுடியாத இந்த கனவுகளில் நான் களவு போகவில்லை,
சற்றே உறங்கி போய்விட்டேன்....