எங்கள் தமிழ்நாடு

எங்கள் தமிழ்நாடு

தமிழ்நாடு எங்கள் தமிழ்நாடு
அமிழ்தினும் இனிய தமிழ்நாடு
இணையே திதற்கு இணையேது
இங்குள்ள பெருமைக்கு இணையேது

கல்வியில் பெரியர் கம்பருமே
களிப்புடன் வாழ்ந்த தமிழ்நாடு
ராமனின் வாழ்வை காவியமாய்
ரசித்திடத் தந்தநம் தமிழ்நாடு

காதலும் வீரமும் வாழ்வினிலே
கண்ணெனப் போற்றும் தமிழ்நாடு
கற்புடன் காளையர் கரம்பற்றும்
கன்னியர் நிறைந்த தமிழ்நாடு

வேதமும் பக்தியும் விரும்புகின்ற
வேதியர் நிறைந்த தமிழ்நாடு
காவிரி பொருனை பொன்னிநதி
கரைபுரண் டோடிடும் தமிழ்நாடு

மூவேந்தர் ஆண்ட பெருமையுடன்
முத்தமிழ் வகுத்தத் தமிழ்நாடு
சாத்திரம் ஆயிரம் வகுத்துத்தந்து
சரித்திரப் புகழ்கொண்ட தமிழ்நாடு

உயர்நூல் பொதுமறைத் திருக்குறளை
உலகிற்குத் வழங்கிய தமிழ்நாடு
பொய்ஞானம் நிறைந்த பூமியிலே
மெய்ஞானம் கண்ட தமிழ்நாடு

யாதும்நம் ஊரே எனச்சொல்லி
பேதத்தை நீக்கிய தமிழ்நாடு
யாவரும் நமக்கு உறவென்று
சேவகம் விதைத்தத் தமிழ்நாடு

அண்ணல் காந்தியை அரையாடை
அணிய வைத்ததும் தமிழ்நாடு
அவர்வழி கொண்ட பெருந்தலைவர்
அன்புடன் ஆண்டதும் தமிழ்நாடு

உழவர் உழத்தியர் ஒன்றிணைந்து
உண்பொருள் விளைக்கும் உயர்நாடு
நெல்லும் கரும்பும் செழித்தோங்கும்
நெடுவயல் கொண்ட நன்நாடு

அர்த்தம் நிறைந்த இந்துமதம்
அதற்கோர் நூல்கண்ட தமிழ்நாடு
கோவிலில் தெய்வம் குடும்பமென
கொலுவீற் றிருக்கும் தமிழ்நாடு.

பாரதியும் தந்தை பெரியாரும்
தீரத்தை ஊட்டியே பெண்களுக்கு
அடுப்படி விட்டு அரசாளும்
அதிகாரம் வகுத்ததும் தமிழ்நாடு

கட்டுடல் கொண்ட வாலிபர்கள்
காளையை அடக்கும் தமிழ்நாடு
தாயும் தந்தையும் தெய்வமென
துதித்திட வைத்த தமிழ்நாடு.

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (31-Jan-18, 5:45 pm)
பார்வை : 161

சிறந்த கவிதைகள்

மேலே