கலையிழந்த ஆலமரம் -கங்கைமணி

கூடிவாழும் ஆசையில
ஓடிவந்தோம் பாசத்துல.
சாதி மதம் வேலிக்கட்டி
தடுத்திருச்சே என்னசொல்ல.

சாதி சனம் வெறுத்துருச்சே
சாமிகூட படுத்துருச்சே!
வாழ்த்த ஒரு இதயமில்ல
வாழ்ந்துகாட்ட வேனும் புள்ள

பறவைகளா பிறந்திருந்தா
பிரிந்து வாழ கற்றிருப்போம்.
கூடுகட்டி குடும்பத்தோட
மரக்கிளையில் வாழ்ந்திருப்போம்.

ஆச வச்ச மனசுக்காக
அம்புட்டயும் இழந்தோம் புள்ள!.
கிளை இழந்த ஆலமரம்
கலையிழக்கும் இனிமே மெல்ல.

கவிழ்ந்த வானம் பூமிபார்க்க
காற்றுவெளி தடையுமில்ல,
காதலுற்ற மனசிரண்ட
கட்டிப்போட யாருமில்ல.

காத்துக்கொரு திசையுமில்ல
காதலுக்கு தடையுமில்ல
நீருக்குள்ள நெருப்புவச்சா
நீரெரிஞ்சு போவதில்ல.

நெல்முனையும் எழுறக்கீறி
பல்முளைக்க உதவும்புள்ள
நல்ல நேரம் கூடிவந்தா
நமக்குதவ நாதியா இல்ல.

புறமுதுகு காட்டிப்போனா
போர்க்களமும் இகழுமுல்ல.
பூமிக்குள்ள புதையுமுன்னே
பகை எதிர்த்து வாழ்வோம் புள்ள.
-கங்கைமணி

(அனைத்து காதலர்களுக்கும் என் இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள் )

எழுதியவர் : கங்கைமணி (14-Feb-18, 12:20 am)
பார்வை : 168

மேலே