இரண்டு தவளைகள்
என் சாம்பல் நிற
கண்ணாடி குடுவையில்
தவளை ஒன்று
விழுந்துவிட்டது.
தவளை என்றால்
எனக்கு பரமபயம்.
துள்ளி துள்ளி
குதிக்கும்போது
வேதனை பிடுங்கும்.
இருப்பினும்,
குடுவை அருகே
செல்லவே பயம்.
தனியே இருக்கிறேன்.
அது தானாக
வெளிவருமென்ற
நம்பிக்கை போனது.
களைத்த தவளையோ
என்னையே பார்த்தது,
யோகா ஸ்டைல்லில்...
ரொம்ப பசிக்குமோ?
அது என்ன சாப்பிடும்?
பூச்சி பிடிக்கும்...
எனக்கோ பூச்சி
பிடிக்க தெரியாது..
சைவம் வேறு...
மனம் மெல்ல
அலையடித்தது...
எதேனும் செய்யவேண்டும்...
Online மூலம் refer
செய்வோம் என்றெண்ணி
முயற்சிக்கையில்...
உங்கள் தவளை
ஆப்பிரிக்க இனமா
இந்திய காட்டினமா
அமேசான் தவளையா...
எதுவாயினும் நாங்கள்
Online order செய்தால்
பீட்சா தருவோம் எனும்
விளம்பரம் கண்டு
ஆச்சர்யம் விலகாமல்
நான் என்
தவளை ஆராய்ச்சியை
ஆரம்பித்தேன்.
சுற்றி சுற்றி வந்தும்
புரியவில்லை...
அது எந்த
இனம், ஜாதி
தேசம், மொழி ....
OC யா...BCயா...
தெரியவேயில்லை.
மலங்க மலங்க
அது முழிக்க...
நொந்து தளர்ந்தேன்...
க்க்ர்ராக்... க்க்ர்ர்ரராக்...
என்னும் பாஷையும்
கேட்டதேயில்லை...
குடுவையைச்சுற்றி
வெப்பமூச்சு எரிந்தது.
சின்னச்சின்ன
அழகான கண்கள்...
பச்சையும் கருப்பும்
கலந்த முத்துப்போல்.
அமரும்விதம் கூட
மிக அருமைதான்...
முதுகுவலி வராது...
கால்நகம் அத்துணை
பெரிதாக இல்லை.
கீறமுடியாது...
கீறினாலும் வலிக்காது.
தவளை இப்போது
கெஞ்சுவது போல்
பார்ப்பதாக தோன்றியது.
கூடவே
சின்றெல்லாவை
வேண்டிக்கொண்டு
காப்பாற்றி விடலாம்
என துணிந்தேன்.
ஆம்...
நான் நிச்சயம்
காப்பாற்றி விடுவேன்.
நீங்களும் என்னை
நம்பவேண்டும்.
தவளை
பிரபஞ்சத்தில்
வெளியே
தனியே
இருக்கிறது.
நன்றாக மூச்சு விடுகிறது.
தாகம் கூட இல்லை.
வயிறு கொஞ்சம்
தொப்பையாய் கூட இருக்கிறது.
இளம் தவளைதான்...
வெளி வந்தால்
புல்வெளியெங்கும் தானாய்
தாவும்..துள்ளும்..ஓடும்..
அது
என்னுள் பொதிந்துள்ள
பேஸ்மேக்கர் தவளை
போல் அல்ல...