காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு

இந்த வாரம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வல்லமை மின் இதழ் நடத்திய படக்கவிதைப் போட்டியில் "சிறந்த கவிஞர்" எனப் பாராட்டுப் பெற்ற கவிதை

பறவை இனங்களின் எத்துணையோ பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம், அதேபோல அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வீட்டுச் செல்லப்பிராணிகளாக கூண்டிலடைத்து வளர்க்கிறோம், அழகு பார்க்கிறோம் கொஞ்சுகிறோம்.

ஆனால் பறவைகளிலேயே மிகவும் பாவப்பட்ட ஜன்மம் காக்கை ஒன்றுதான், அதன் நிறத்தாலே அதற்குப் பெருமை இல்லை, ஆனால் குணத்தால் பெருமையுண்டு. ஏனோ தெரியவில்லை அதனை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்ததாக இதுவரை சரித்திரமில்லை.

ஒரு வழக்கம் மட்டும் இன்று வரை தொன்று தொட்டு கடைபிடிக்கப்படுகிறது, அது காக்கைக்கு உணவிடுவது, அதுவும் பித்ருக்களின் தோஷத்தை நீக்கும் என்கிற நம்பிக்கையால் மட்டுமே.

ஒரு அம்மா காக்கைக்கு உணவிட்டு வருவதையும், அவருக்காகவே பல காக்கைகள் அவரைச் சுற்றி வட்டமிடுவதோடு மட்டுமல்லாமல், அவர் மடியில் அமர்ந்து கொண்டு கையிலிருக்கும் உணவை மட்டுமே எடுத்துச் சாப்பிடும் அற்புதத்தை யு டியூபில் பார்த்தேன். பொதுவாக காக்கை மனிதரிமிருந்து சற்று விலகியே இருக்கும், நாம் வளர்த்தாலும் அது நம்மேல் அது உட்காராது. இதுவும் ஒர் ஆச்சரியம்தான்.

விஷயத்திற்கு வருவோம். படக்கவிதையில் காக்கைப் படத்துக்குக் கவிதை எழுதிய அனைத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் வல்லமையின் சார்பாக “காக்கைக்கு அர்ப்பணிப்போம்”. கவிஞர்களின் காக்கை பற்றிய சிந்தனையால் இன்று காக்கையின் பெருமை பலருக்குத் தெரிய வருகிறது.

இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகவும், சிறந்த கவிதையாகவும் தேர்ந்தெடுத்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், கவிதைக்குப் படத்தை எடுத்த திருமிகு ராமலஷ்மி, படக்குழுமத்தின் ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பனுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன் பெருவை பார்த்தசாரதி.

==================================
காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு..!
==================================

கடைச் சங்ககாலப் பெண்புலவரும் “விருந்துவரக்
..........கரைந்த காக்கையது பலி’யெனப் புகழ்ந்துரைத்தார்.!
உடனொத்த பொய்யாமொழிப் புலவன் மிகையாக
..........இதனைக் ‘கரவா கரைந்துண்ணும்’ குணமென்றான்.!
‘நடப்பதுவே நிற்பதுவே’ எனப்பாடிய மகாகவியோ
..........நந்த லாலாவைக் கண்டான் ‘காக்கைச் சிறகினிலே’.!
படத்தினிலேநான் காணுகிறேன்!பகுத்தறிவுளக் கரிய
..........பகிர்ந்துண்ணும் ஜீவியாக! பகவானின் வாகனமாக.!

பாட்டி வடைசுட்ட காக்காக்கதையும் காலத்துக்கும்
..........பகன்றுரைத்த பாடம்தானந்த “காகத்தின் தந்திரம்”.!
கொட்டிக் கிடக்கும் பணமிருந்தும் ‘எச்சிற்கையால்
..........காக்கா ஓட்டாதார்’ எனச்சிலருக்குப் பெயருண்டு.!
வேட்டியை மடித்துக்கட்டி அரசியல் சூழ்ச்சிசெயும்
..........வித்தகரை ‘காக்கா பிடித்து’ முன்னேரியவரென்பார்.!
வேட்டையாடி உண்ணும் ‘கருத்த மனமுடையோர்’
..........விட்டு வைக்கவில்லை குணமுடைய காக்கையும்.!

அண்டத்தில் பறைவையினம் ஆயிரமாம்! அதிலே
..........அருங் குணமுளது காக்கையினம்!அதனால்தானோ.!
அண்டங்காக்கை பரிமளம் மணிக்காக்கை எனப்பல
..........உருவமதில் வடிவம் கொண்டாராம் காகபுஜண்டர்.!
அண்டமுழுதும் பரந்துதிரிந்து கொண்ட ஞானத்தால்
..........அழியாத்தமிழில் உபநிடத மொன்றைப் படைத்தார்.!
அண்டத்தின் தேவையறிந்த மகேஸ்வரனும் அதை
..........ஆதாரத் தத்துவமாக்க அவருக்கருள் செய்தானே.!

===================================================

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (10-Mar-18, 1:46 pm)
பார்வை : 132

மேலே