கருவறை

ஒரு பெண்ணின் வாழ்வு குழந்தையாய் ஆரம்பித்து கன்னியாய் தொடங்கி மங்கையாய் மாறி தன் மணாளனுக்கு மனைவியாகி பின் தாயாய் உருமாறுகிறாள். இப்படி உருமாறியவளே தன் வாழ்க்கையின் பலனை நூறு சதவீதம் அடைந்த சந்தோசம் பெறுகின்றாள்.அப்படி உருமாரிய பெண்ணின் கதையே இது....
நமது சமுதாயம் கேள்விக்காகவே பிறந்தது, பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் கேள்விகளை மட்டுமே கேட்டனர். பெண்ணாக இருந்தால் படித்த முடித்த உடனே அடுத்து திருமணம் எப்பொழுது வரன் பார்த்தாயிற்றா??? திருமணம் முடிந்த பின் ஏதாது நல்ல செய்தி உண்டா..?? எத்தனை குழந்தைகள்??
அதுவே ஆணாக இருந்தால் என்ன வேலை?? என்ன சம்பளம்?? சொந்த வீடா?? நமது சமுதாயம் ஒன்றை புரிந்து கொள்ள மறக்கின்றது. இங்கே அவரவர் பிரச்சனையின் பின்னே தினம்தினம் ஓடிக்கொன்டே வாழ்க்கையையூம் நடத்தி கொண்டு வருகின்றனர், அவர்களின் வாழ்க்கைக்கு வழி சொல்லி உங்களது நன்மதிப்பை பெறுங்கள். சமுதாயம் என்றவுடன் மனதின் குமுறல் சற்றே பீரிட்டது....
நக்ஷத்திரா 25 வயதை எட்டிய பருவ மங்கை, அவளின் பெற்றோருக்கு ஒரே செல்ல மகள் அன்புக்கும் பாசத்திற்கும் குறைவின்றி வளந்தாள்.அவளின் திருமணமும் அவர்களின் ஆசியோடு நடந்தது.அவளுக்கு மணம் முடிந்து 6 மாதங்களே ஆகியிருந்தன.
குடும்பத்தில் இருக்கும் ௮ணைவரின் எதிர்பார்ப்பும் நக்ஷத்திராவின் மீது தான், என்று தங்களின் குடும்ப வாரிசை சுமக்கிறேன் என்ற செய்தியை சொல்வாளோ என்றே.நக்ஷத்திராவின் தாயோ கோவில்களுக்கு வேண்டுதல்களை வைக்கவே ஆரம்பித்துவிட்டால். கனிந்த கனியின் விதை மண்ணில் பட்டு துளிர் விட்டது அந்த சுகம் மண்ணிற்கு மட்டுமே தெரிந்தது.
ஆம் .....நக்ஷத்திரா கருவுற்றாள்.....ஆனால் இன்னும் அவள் அதை அறியாதிருந்தாள்.
அது அவளின் தலை தீபாவளி நக்ஷத்திரா தனது அன்னையின் வீட்டில் இருந்தாள் வழக்கம் போல் காலை எண்ணெய் குளியலை முடித்து விட்டு உணவுக்கு அமர்ந்தனர் இலையில் பற்பல பலகாரங்களை பார்க்கவும், "அம்மா எனக்கு இதெல்லாம் வேண்டாம் வெறும் இட்லி போதும், எனக்கு என்னவோ போல இருக்கு சாப்பிட முடில ஒமற்றமாறி இருக்கு ம்மா" என்றாள். பொதுவாகவே அவள் எதுவும் அதிகம் சாப்பிட விரும்பாதவள் எனவே அன்னையும் "சரிம்மா" என்றாள்.
உணவுக்குப்பின் அன்னையுடன் பேசுகையில் "என்னமா நாள் எதும் தள்ளி போயிருக்கா" என்று அவளின் அன்னை கேட்டாள்."ஆமாம்மா", ஆனா "இப்போதான நான் கோவை போனேன் புது இடம் அங்க பருவநிலை புதுசு அத நம்ம உடம்பு ஏத்துக்கனும்ல அதன் நானும் செக் பண்ணல" என்றாள். மாலையில் எதற்கும் ஹாஸ்பிடல் போலாம் என்ற எண்ணம் தோன்றவே கணவனுடன் சென்றாள். அங்கு கர்ப்ப சோதனையில் அவள் கருவுற்றது உறுதிப்படுத்த பட்டது. பொதுவாக கர்ப்ப சோதனை இயந்திரத்தில் நாம் கர்பத்தை சோதித்தால், கர்பம் தரித்திருந்தால் இரு கோடுகள் வரும், அந்த இரு கோடுகள் எதற்கு தெரியுமா ?? தன் உயிரோடு இன்னோரு உயிர் சேர்ந்து இருஉயிர் என்று சொல்லவே.....அன்றே மீயொலி நோட்டம் (ultrasound scan) பார்த்து தன் கருவில் தங்களுது உயிர் கருவாய் இருப்பதை கண்டு கண் இமை ஓரம் வந்த கண்ணீரை துடைத்தவளாய் அருகில் இருந்த தன் கணவனின் கைகளை பிடித்து தன் மொத்த காதலையும் இரு விழியால் வெளிப்படுத்தினாள்.
நாட்கள் நகர்ந்தன தன் கருவில் இருக்கும் உயிரிடம் தினம்தினம் பேசி கொன்டே இருந்தாள் நக்ஷத்திரா. அன்றாட செய்யும் அணைத்து செயலிலும், அமர்வது , நடப்பது , படுப்பது, என்று அனைத்திலும் தன் வயிறை பிடித்த வாரே செய்தாள். அந்த கருவில் இருக்கும் சிசுவிற்கு செல்ல பெயரிட்டு "அம்மா உட்காரப்போறன் உனக்கு வலிக்காம பாத்துக்கிறேன்.குளிக்கும் போது கூட தன் வயிற்றை தழுவியே இருந்தாள், சாப்பிடும் போது கூட சற்றே வாந்தி வருவது போல் இருந்தால் நம்ம குழந்தைக்கு இது பிடிக்கல போல என்று அந்த உணவை தவிர்த்தாள். தனது வாழ்வில் பல சங்கடங்களை தாங்கி வந்த அவளுக்கு இமை மூடினால் அம்மா அப்பா கணவர் என்றே இருந்துவிட்டு இப்போது இமைக்கமால் தன் சிசுவை பேணி காத்து கொண்டாள். இது நக்ஷத்திராவின் குணம் அல்ல தாய்மையின் வெளிப்பாடு.கண்ணாடி முன் நிற்கும் போது தன் வயிறை பார்த்தும், குழந்தையோடு பேசிகொண்டும் தன் குழந்தையின் வளர்ச்சி பற்றி மட்டுமே யோசித்து கொண்டு இருந்தாள். இப்படியே அவளுக்கு மாதம் 4 ஆனது.
சுகமான நாட்களில் அந்த கருப்பு தினம் வந்தது. வழக்கம் போல் காலை எழுந்து முகம் கழுவ பாத்ரூம் சென்று வரும் போது அங்கே சிறு ரத்த துளிகளை பார்த்து ஒன்றும் புரியாதவளாய் நின்றாள். பின் கொஞ்ச நேரத்தில் கழிப்பறைக்கு சென்றபோது அவள் சற்றும் எதிர்பாக்காத உதிரப்போக்கு நக்ஷத்திராக்கு. கண்கள் இருண்டது, இதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாக துடித்தது, உடம்பெங்கும் வியர்த்து நடுங்கியது. கணவனை அழைத்து "நம்ம பாப்பாக்கு என்ன ஆச்சுங்க, ஏன் எனக்கு இப்படி ஆகுதுன்னு அழுத்துகொன்டே கேட்டாள்". அவள் கணவனுக்கு இவளே முதல் குழந்தை எனவே இவளை ஆறுதல் படுத்தி ஹாஸ்பிடல்க்கு சென்றனர்.அங்கு மீண்டும் மீயொலி நோட்டம் பார்த்து குழந்தைக்கு இதய துடிப்பு இல்லை எனவே அந்த சிசுவை கருசிதைவு செய்ய முடிவு செய்து நக்ஷத்திராவின் கணவரிடம் விளக்கினர். அவனோ என் மனைவியின் உயிருக்கு எதும் வாராதல்லவா என்று தன் கேட்டான். மருத்துவ குழுவோ "இப்போ இருக்க அறிவியல் தொழில்நுட்பத்தில் இதல்லாம் ரொம்ப சாதாரணம்" என்றனர். எதுவும் புரியாமல் நின்றான் அவன் கண் முன் தெரிந்தது நக்ஷத்திராவின் முகமும் அவளின் ஆசை கனவுகளுமே...அவனின் சம்மதத்தோடு கருசிதைவு செய்தனர். கண் விழிக்கவும் நக்ஷத்திரா கேட்டது "நம்ம பாப்பா நல்லா இருக்குல்லங்க" என்றே. சூழ்நிலையை புரிய வைத்து அவளின் கண்ணீரை துடைத்து "எனக்கு நீ தான் முக்கியம் குழந்தை அப்புறம் கண்டிப்பா பொறக்கும்" என்றான். கடவுள் குடுத்த பரிசாய் நினைத்து பேணி காத்து வந்த அவளின் குழந்தையை கடவுளே எடுத்து கொண்டாரோ என்று யோசித்தாள்.ஒரு பூவை இழந்த செடி போல் முகம் வாடியும் தன் கருவறை கரு இன்றி இருப்பதையே அறிவு உணர்த்தியது...எனினும் மனம் ஏற்கவில்லை பல கேள்விகள் அவள் மனதிற்குள் ...
முதல் பயம் நம் சமூகம் என சொல்லுமோ என்று ??? பொதுவாகவே நமக்கு என்ன நேர்ந்தாலும் நாம் உடனே யோசிப்பது "யாரது ஏதும் சொல்லிடுவாங்களோ " என்று தான். இந்த யோசனைக்கு பின் தான் மற்ற சிந்தனையே...எது நடப்பினும் நாம் தான் சமாளிக்க வேண்டும் எனவே மற்றவா் பற்றிய சிந்தனை இனி எதற்கு....
அடுத்த அவள் குமுறல்..
இது காலத்தின் கட்டாயமா?? இல்லை காலனின் கடமையா?? என்று மனம் குமுறிக்கொன்டே இருந்தது. எனினும் ஒரு குழந்தை வந்து தன்னை "அம்மா" என்று அழைத்து கட்டிக்கொள்ளும் வரை நக்ஷத்திராவின் மனம் குமுறலோடு தான் இருக்கும்.

எழுதியவர் : தாரா (தாரணி ராஜாராம் ) (8-Apr-18, 5:36 pm)
Tanglish : karuvarai
பார்வை : 203

மேலே