ராசா ராணி

ராசா ராணி


வெறிச்சோடிக் கிடக்கிறது
வெள்ளைச்சாமித் தாத்தா வீட்டுத் திண்ணை
இன்று பெளர்ணமி வெளிச்சம்
இருந்த போதும் வெறிச்சோடிக் கிடக்கிறது
எங்கே போனார்கள் எங்கள் சிறுவர்கள்

எங்கள் ஆரம்பப் பள்ளி நாட்களில்
நான்கடி அகலமும் ஏழடி நீளமுமான
அந்தத் திண்ணைதான்
எங்களின் ராசாங்க மேடை

திண்ணையின் கிழக்கு ஓரத்தில்
தலைவைத்துத் தூங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த
திண்டுதான் ராசாவுக்கான அரியணை

எங்கள் ராசா ராணி விளையாட்டில்
எப்போதும் வாத்தியார் மகன்தான் ராசா
ஆம்! கிழியாத சட்டை
போட்டவன்தானே ராசாவாகலாம்.

அவனின் ஆணைகளின் படி
ராணி மட்டும் அடிக்கடி
மாற்றப்படுவார்கள்



ஒருநாள் ராசா தேவகியை
ராணியாகக் கட்டளையிட்டான்
எங்கள் தெருவின் தேவதைகளில்
ராணியாக நடிக்க மறுத்த
முதல் தேவதை அவள்தான்

அன்று தேவகியும் நானும்
புன்னகை பரிமாறிக்கொண்டதில்
பொறாமை கொண்ட ராசா
எங்களுக்கு விதித்த தண்டனை
இருவரும் விளையாட்டில் இருந்து
அன்று நீக்கப்பட்டோம்

அந்தப் பெளர்ணமி நாளில்தான்
அவள் எனக்கு முதன்முதலாய்
நிலவை ரசிக்கக் கற்றுக்கொடுத்தாள்

விளையாட்டு கலைந்து அனைவரும்
வீட்டிற்குச் சென்ற பிறகு
ராணியாக அரியணை ஏறினாள்
அவளருகே ராசாவாக நான்

இன்றும் பௌர்ணமிகள்
அவளையே நினைவுபடுத்துகின்றன

அவள் மகனுக்கு
என்ன பெயர் வைத்திருக்கிறாளோ தெரியவில்லை
என் மகளின் பெயர் தேவகி

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (11-Apr-18, 3:38 pm)
Tanglish : rasa raani
பார்வை : 204

மேலே