மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது மொழிந்தது ஏன் ஐ நாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு கவிஞர் இரா இரவி

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்

கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு !



வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது!



மொழிந்தது ஏன் ? ஐ நாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு !

கவிஞர் இரா. இரவி !



உலகின் முதல் மொழியை அழிய விடலாமா?
உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து காக்க வரலாமே!



அய் நா மன்றம் ஆய்வறிக்கையில் பொருள் உள்ளது
அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ் காத்திட வேண்டும்!



தமிங்கிலம் பரப்பிம் ஊடகங்களுக்கு பாடம் புகட்டுவோம்
தமிழைத் தமிழாகப் பேசிட முயற்சி செய்திடுவோம்!



எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை அழிந்து
எங்கும் தமிங்கிலம் எதிலும் தமிங்கிலம் என்றானது வேதனை!



பாலில் நஞ்சு கலப்பது போலவே நாளும்
பைந்தமிழில் பிறமொழி நஞ்சு கலப்பது முறையோ?



பிறமொழி எழுத்துக்கள் வேண்டவே வேண்டாம்
பிறமொழி சொற்களும் வேண்டவே வேண்டாம்!



தமிழர் தமிழரோடு தமிழில் பேசுவதே சிறப்பு
தமிழர் தமிழரோடு ஆங்கிலம் பேசுவது எதற்கு?



மற்ற மொழியினர் தாய்மொழியில் பேசுகையில்
மற்றற்ற தமிழர் பிறமொழியில் பேசுவது ஏனோ?



தமிழ் என்பது மொழி மட்டுமல்ல நம் உயிர்
தமிழ் அழிந்தால் தமிழன் அழிவான் உணர்!



மூத்தமொழி முதன்மொழி தமிழ்மொழி
மூலைமுடுக்கு உலகெங்கும் ஒலிக்கும் மொழி!



பன்னாட்டு மொழி என்ற பெருமை உண்டு
பன்னாடுகளின் ஆட்சிமொழி நம் தமிழ்மொழி!



தமிழின் சிறப்பை மற்றவர் அறிந்துள்ளனர்
தமிழின் சிறப்பை மற்றவர்கள் அறியவில்லை!



இந்த நிலை இப்படியே நீடித்தால் விரைவில்
அய் நா மன்றம் சொன்னது நடந்து விடும்!



எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது பழமொழி
இனிய தமிழில் பலமொழி கலக்க தேயும் நம்மொழி!



கொஞ்சம் கொஞ்சமாக பரவரும் தமிங்கிலம்
கன்னித்தமிழை அழித்துவிடும் என்பதை அறிந்திடுக!



நல்ல தமிழில் நாளும் பேசுவோம் எழுதுவோம்
நாள்தோறும் நல்ல தமிழ்ப்பேச்சு நடைமுறையாகட்டும்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (11-Apr-18, 8:09 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 70

மேலே