ஸ்னேஹாவிற்கு
தோழிக்கு...
கேட்டிருந்தாய்
என்னை பற்றி எழுதேன்..
நமது மொழி வேறு.
மாநிலம் கூட வேறு.
பார்த்தறியோம்.
பேசியறியோம்...
இணையம் மென்றிடும்
நேரத்தில் எப்படியோ
நட்பில் கிளைத்த உறவு.
வருடங்கள் போயின.
நாள் முழுவதும் பேசுகிறோம்.
அர்த்தமில்லை எவற்றுக்கும்.
அவசியமும் இல்லை.
நள்ளிரவில் டீ குடித்தாயா
என்பாய்...
ஐஸ்கிரீம் கேட்பாய்.
பேய் கதைகள் பிடிக்காது.
குடும்பம் பற்றி பேசுவோம்.
தீராக் காதல் கணவனிடம்.
நீ அழுத கணம் தெரியும்.
என் கோபம் அறிவாய்.
வேறென்ன ஸ்னேஹா
உன் பற்றி எழுத....
ஒருநாள் தவறினால்
இடித்துக்கொண்ட வலியில்
ஊமையாய் கசியும்
உன் கண்ணீர் பற்றியா?