அப்பாடி ஒரு வேலை கிடைத்து விட்டது
அப்பாடி ஒரு வேலை கிடைத்து விட்டது !
அடித்து பிடித்து ஏதோ
ஒரு உத்தியோகத்தில்
சேர்ந்து விட்டாலும்
வங்கியில்தான் இனி ஊதியமே
அறிவித்து விடுகிறது
அரசாங்கமாகட்டும், தனியாராகட்டும்
ஆதார் பான் எண்களை
அடையாளமாய் கொடுத்து
சத்தமில்லாமல் வலை பின்னி
எங்கு செல்ல நினைத்தாலும்
தப்பிக்க முடிவதில்லை
கலர் கலராய் திரையில் வந்து
கண்டதையும்வாங்க சொல்லி
கடனை கொடுத்து வங்கியின்
மூலம் ஊதியத்தை உறிஞ்சி
விடுகிறது !
அரசும்,தனியாரும்
நாகரிக பெயரில்
கந்து வட்டி சொல்லி
கட்டாயமாய் ஊதியத்தை
பிடுங்கி விடுகிறது
ஏழைகளின் நண்பன்
என்று சொல்லி
“வரி” களை வரிசையாய்
பட்டியல் போட்டு
வாட்டி எடுத்து விடுகிறது
வாழ்க்கைக்கும் நோயிற்கும்
அஞ்சி காப்பீடு செய்து
ஊதியத்தில் ஒரு பகுதி
கரைந்துதான் போகிறது
அன்று ஈட்டிக்காரன்
இன்று நாகரிக பெயருடன்
எண்ணற்ற நிறுவனங்கள்
இதில் மட்டும் அரசும்
தனியாரும் ஒற்றுமையாய் !