அந்திப்போது

அந்திப்போது..!
==============
அந்திசாயும் நேரத்தில் மட்டுமே வருவாள்
..........ஆதவனைத் தேடும் பணிமேற் கொள்வாள்..!
மந்திரம் செய்வித்தது போலவன் மறைவான்
..........மாற்றமிலாமல் நிகழும் நித்தமிது இயற்கை..!
சந்தி ரோதய மென்றவளை அழைப்போம்
..........சூரிய அஸ்தமன மென்றவனைக் கூறுவோம்..!
சந்திரனும் சூரியனும் காதல்செய்யும் நேரம்
..........செவ்விதழ் போலக் கடலேழும் காட்சிதரும்..!
காலையில் ஆதவனும் இரவினில் சந்திரனும்
..........காலமாற்றம் செய்கின்ற காதலர்கள் ஆவரோ..!
மாலைத் தென்றலும் மலர்ச்சோலை புகுந்து
..........மணம் வீசும்! அக்காதலர்களை வாழ்த்துதற்கு..!
கோலமிட்டு அவர்களை வரவேற்பது போல்
..........கடலில் விண்மீனும் தண்ணீரில் புள்ளியிடும்..!
பாலமாக அமையும் அங்கே அந்திப்போது
..........பாங்காக அவர் களிருவரும் சந்திப்பதற்கு..!
==========================================
வல்லமை படக்கவிதைப் போட்டியில் சமர்ப்பிக்கப்பட்டது..