அக்கா
முதல் விளையாட்டு பொம்மை
முதல் உறவு
முதல் தோழி
முதல் எதிரி
என் அக்கா.....
பேனா புத்தகம் தின்பண்டம்
தெரு கடை பள்ளி
சொந்தங்கள்.......
இப்படி எல்லாவற்றையும்
முதலில் அறிமுகம் செய்தவள்...
தொட்டுப் பேசாதே
என் பொருட்களைத் தொடாதே
அதைச் செய்யாதே
இதைச் செய்யாதே
எனக்கட்டளை இடுபவள்..
நான் தவறி விழுந்தால் கூட
அவள் கதறி அழத் தவறுவதில்லை
இருவருடைய எண்ணங்களும்
எப்போதுமே ஒன்றாய் இருந்ததில்லை...
ஆனாலும்
ஒருவரை விட்டு
ஒருவர் பிரிய விரும்பியதில்லை.
நான் விரும்பியதை எல்லாம்
எனக்காக விட்டுக் கொடுத்தவள்..
என்னுடைய தாக்கம்
அவளிடம் இருக்கிறதா
எனத் தெரியவில்லை
அவளுடைய தாக்கம்
என்னில் நிறைந்திருக்கும்.
இரு வேறு துருவங்கள்
துருவங்கள் பிரியும் இடம்
இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை...
உணர்ந்திருக்கிறேன்
அம்மாவின் ஸ்பரிசத்தை
அவளிடம்....