காதல்

கரும்பே, தேன் கரும்பே
என்றான், என்னை,
உந்தன் கன்னங்கள்
மாங்கனி என்றான்
உந்தன் இதழ்கள்
மாதுளைப்பூ என்றான்
வெண் சங்கு உந்தன்
கழுத்தானதென்றான்
உன் சிரிப்பில் பற்களை
நான் காணவில்லை
முத்துக்களல்லவோ கண்டேன்
நான் என்றான் -கார்மேகம்
ஆனதோ உந்தன் கூந்தல்
பிறைச் சந்திரனே
உந்தன் நுதல் ஆனதடி
என்றான் -இடையே காணவில்லை
என்று நினைக்கையில்
நீ நடந்தாய் கோடி மின்னல்
இடையானதைக் கண்டேன் என்றான்

இப்படியெல்லாம் பேசி
என் மனதை மயக்கி
தன்வயப் படுத்தி
என்னை வென்றான்
வெற்றியின் வேட்கையிலே
இருந்தானோ இன்னும்,
என்னை விட்டு போனான்
இன்னும் ஓர் மலரை நாடி
கரும்பு நான்...............
ரசம் அத்தனையும் இழந்து
வெறும் சக்கையாய் வீதியிலே
சக்கை மீண்டும் கரும்பாவதில்லை
அவனோ மது உண்ணும் வண்டாய்
மதுவைத்தேடி மாதை நாடுகிறான்
வண்டைப் பிடிப்பார் யார்
பிடித்து வதைப்பார் யார்
என் மனவலிக்கு மருந்தாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jun-18, 3:15 pm)
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே