தமிழும் வாழ்வும்
உயிர் ஆதாரம்
மெய் புள்ளிகளோடு இணைந்து
உயிர்மெய் எழுத்துக்கள் உண்டானது போல் ,
நம் உயிர் ஆதாரம்
உடல் மெய்யோடு இணைந்து
நம் உணர்ச்சி மொழிகளை
வார்த்தெடுக்கின்றது .
குறிலோடும் நெடிலோடு
உறவாடும் வல்லினமும் ,
மெல்லினமும் , இடையினமும்
கொடுக்கும் ஓசை
அதன் இயல்பை ஒத்தது போல் ,
ஆணும் பெண்ணும்
இணைந்த உறவில்
வள்ளிய ,மெல்லிய
மற்றும் இடைப்பட்ட இயல்புகளில்
மனிதர்கள்.
ஒத்த ஓசையில்
வலுசேர்க்கும்
எதுகை , மோனை போல்,
வாழ்க்கையில் வலுசேர்க்கும்
ஒத்த எண்ணங்கொண்ட
நண்பர்கள் .
மொழியின் முதலாதாரம் 'அ'
அண்டவெளியின் ஆதாரம் 'அம்'
உறவின் முதலாதாரம் 'அம்மா '
அடுத்தடுத்து ஏறி இறங்கும்
குறில் நெடி ஓசை போல் ,
நம்முள் ஏறி இறங்கும் சுவாசமும்,
ஏற்ற இறக்க வாழ்க்கையும் .
மொழியும் வார்த்தைகளும்
ஒன்றே என்றாலும் ,.
இயல்பில் மாறிய
இயல் , இசை , நாடகம் போல் ,
இனத்தில் ஒத்த மனிதர்களே
ஆயினும் ,
இயல்பில் பிரிந்த உறவுகள் .