எட்டுவாய் பேய் நாட்டுப்புற பாட்டு - ஒப்பாரி
சிங்கார சீமைக்கு
சீக்கிரமா போயிடத்தான்
ஒய்யார ரயிலுண்டு
ஒண்ணுக்கு ரெண்டு ரோடுண்டு - ஐயா
ஒண்ணுக்கு ரெண்டு ரோடுண்டு…!
காததூரம் ஆவுதாமே
காலொடஞ்சி போவுதாமே
காதுகண்ணு மூடிக்கிட்டு
போடுதொரு புதிய ரோடு - சர்க்காரு
போடுதொரு புதிய ரோடு…!
பாருமக்க பசிபோக்க
பஞ்சமெல்லாம் தெனம்போக்க
ஏர்புடிச்சி மச்சானே
சீர்படுத்தி வெச்சியே - நெலத்தை
சீர்படுத்தி வெச்சியே …!
சீர்படுத்தி வெச்சாலும்
சீழ் புடிச்ச சர்க்காரு
சோறு போடும் பூமியில
தாரு ஊத்த பாக்குதய்யா - மச்சான்
தாரு ஊத்த பாக்குதய்யா…!
எட்டுவாய் பேயொன்னு
எக்காளமா கூவிகிட்டு
எங்க ஊர வாய்முழுங்கி
ஏப்பமிட பாக்குதய்யா - நல்லா
ஏப்பமிட பாக்குதய்யா…!
ஒழவெல்லாம் ஒழிச்சிப்புட்டு
எழவுகூட்ட பாக்குறிய
ஒங்க வயிறு பசிக்கென்ன
தாரு கரைச்சி குடிப்பியலோ - ஐயா
தாரு கரைச்சி குடிப்பியலோ…?