காதல்
அந்தி சாயும் வேளை
பரிதியும் மறைந்து போனான்,
வானம் சிவந்தது மெல்ல. திறந்தது
மூடிய மேகம், மழைத்தூறல் வந்தது;
மழைத்தூறலில் நனைந்தேன் ,
வசந்தத்தின் தென்றல் வந்து
என்னைத் தொட்டது, உள்ளம்
குளிர்ந்தது இன்னும் அவள்
வரவில்லையே இரவு வந்துவிட்டால்
இன்று நான் அவள் பார்வையில்
நனைவதெப்போது என்று எண்ணி இருக்க,
முல்லைக்கொடியாய் அவள் நடந்துவந்தாள்
பூவிழியால் என்னைப்பார்த்தாள்
காதல் மழையால் என்னை நனைத்து,
இன்முகமும் காட்டி புன்சிரிப்பும் தந்து,
புள்ளிமானாய் துள்ளி மறைந்தாள்;
அந்தியும் போனது இருள் கவ்வியது வானை,
இருளைக்கிழித்து தண்ணொளியும் தந்து
பொன்னொளியாய் வான் நிலவும் வந்தது;
பக்கத்து செடியில் பாரிஜாதம் மலர்ந்தது
இரவு ராணியாய் வாசம் பரப்பிய மலர் அது;
என்னவளை பார்த்த சுகம் மனதிலுந்த.
வீடு நோக்கி நடந்தேன், கற்பனையில்
அவளை பாரிஜாதமாய் நினைத்து அவள்
தந்த பார்வையை அதன் நறுமணமாய்
மனதில் கொண்டு , மீண்டும் நாளை ......
அவள் வரவு நோக்கி..............