தந்தையின் கனவு - அசிரா
ராமனுக்கு கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை ஆரம்பித்திருந்தது. அன்று அடைமழை விடாமல் பெய்ததால் எங்கேயும் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் தொலைக்காட்சியை வேறு வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
வெளியூர் சென்றிருந்த அவனுடைய தந்தை வீடு திரும்பினார். அவனைப் பார்த்து புன்முறுவலுடன் ராமா தேர்வுகளை எப்படி எழுதியிருக்கிறாய்? என வினவினார். நன்கு எழுதியிருக்கிறேன் தந்தையே என பதிலளித்தான். முதல் வகுப்பில் தேர்வாகிவிடுவாயா என கேட்டார். அப்படித்தான் நினைக்கிறேன் என கூறினான்.
விடுமுறை முடிந்து, ராமன் கல்லூரிக்கு திரும்பினான். தேர்வு முடிவுகள் வந்தன. இரண்டாம் வகுப்பில் தான் தேறியிருந்தான். மனம் கலங்கினான் அப்பாவிடம் தைரியமாக கூறினேனே இப்பொழுது இப்படி ஆகிவிட்டதே என யோசித்தான். புதிதாய் நடத்திய பாடங்களில் மூழ்கி இருந்ததால் இதைப் பற்றி முற்றிலுமாய் மறந்து விட்டான்.
வார இறுதியில் ஊருக்கு சென்றிருந்தான். அம்மா அப்பா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அவனை உபசரித்தார்கள். தன் அப்பாவிடம் முதல் பருவமுறை தேர்வில் இரண்டாம் வகுப்பில் தேர்வு பெற்றதை தயங்கி தயங்கித் கூறினான். ஒ அப்படியா, பரவாயில்லை இனி வரும் தேர்வுகளில் நன்றாக படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெறு, முயன்றால் உன்னால் முடியும் என அவனை ஊக்கமூட்டினார். அவன் மனது மிகவும் லேசானது. தன் தந்தையின் அன்பை புரிந்து கொண்டான். ஆசையையும் அறிந்து கொண்டான்.
கல்லூரி திரும்பிய பின் விடுதியில் மாலையில் தீவிரமான சிந்தனையில் மூழ்கினான். அவன் நண்பன் அவன் நிலையைக் கண்டு என்ன ராமா? விஞ்ஞானி ஆகப்போகிறாயா என அவனை வினவினான் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே இல்லை நண்பா, என்றும் தன் சிந்தனைக்கான காரணத்தை கூறினான். மிகவும் கடினம் தான்ஆனால் உன் தந்தை கூறியது போல முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை. முயற்சி திருவினையாக்கும் என அவனை உற்சாகப்படுத்தினான்.
தன் தோல்விக்கான காரணங்களை முதலில் வகைப்படுத்தினான். பின்பு தன் பொழுதுபோக்குகளை பட்டியலிட்டு அவற்றை கட்டுப்படுத்தினான். விடுமுறை பிரயாணங்களை குறைத்தான். தன் படிக்கும் முறையை நெறிப்படித்தினான். நண்பர்களின் உதவியோடு பாடங்களில் அதிக கவனம் செலுத்தினான். சிறிது நம்பிக்கை அவனில் பிறந்தது. தன்தந்தை தன்னிடம் கேட்ட முதல் கோரிக்கையை வெற்றியாக்கிவிட வேண்டும் என அவனுக்குள் ஒரு உத்வேகம் பிறந்தது.
முதலில் படிக்கும் பொழுது கடினமாக இருந்தது.பாடங்களை தொடர்ந்து படிக்கும்பொழுது, எளிதாகவும், ஆர்வமாகவும், சுவாரசியமாகவும், மேலும் தொடர்ந்து கற்கும் எண்ணத்தையும் அளித்தது. முயற்சி செய்தால் முடியும் என தந்தை கூறியது போல் நடப்பதை உணர்ந்தான்.
இரண்டாம் பருவமுறை தேர்வுகள் நடந்தன. ராமன் முதல் முறையாக முழு தயாரிப்புடன் தேர்வுகளை எழுதினான். முடிவுகளுக்காக எதிர்நோக்கியிருந்தான். அவன் மனம் படபடவென்ற அடித்துக் கொண்டது.
எதிர்பார்த்தது போல முதல் வகுப்பில் தேறினான். ஆனந்தத்தில் அவன் துள்ளிக் குதித்தான். ஆயிரம் பட்டாம் பூச்சிகள் அவனுள் பறப்பது போல் உணர்ந்தான்.
அவன் ஆனந்தம் நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. ஏனென்றால் 3ஆம் பருவமுறை தேர்வில் அவன் எ்ண்பது சதவிகிதம் எடுத்தால் தான் அவனால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறமுடியும் என்ற நிலை உருவானது.
3வது பருவமுறையில் செய்வதற்கு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் சம்மதம் பெற்று குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டும்.
எந்நிறுவனமும் ராமனை ஏற்றுக் கொள்ளாத போது, அவன் எதிர்கால கனவுகள் முடங்கிய போது, எதிர்பாராத விதமாய் அவன் நண்பனின் தந்தை ஒரு நல்ல நிறுவனத்தில் திட்டச் செயல் வேலை செய்யும் வாய்ப்பை நல்கினார்.
சிறுசிரமங்களுக்கு பிறகு ராமன் திட்டச் செயல் வேலையை கல்லூரியில் சமர்ப்பித்தான். நேர்முக தேர்வு நாள் நெருங்கியது. ராமனுக்குள் ஆயிரமாயிரம் சிந்தனைகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. தேவையான மதிப்பெண்களை எப்படி பெறலாம், நேர்முக தேர்வை எப்படி தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம், என திட்டமிட்டு அதன்படி தன்னை தயார்படுத்திக் கொண்டான். அந்த நாளும் வந்தது. நேர்முக தேர்வில் அவன் எதிரபார்த்ததைவிட நன்றாக செய்தான்.
தேர்வு முடிவுகள் வர தாமதமாகின. அவன் தந்தையின் ஆசை நிறைவேற வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்.
இறுதியாக அந்நாளும் வந்தது. அவன் சான்றிதழ்களை வாங்கிய போது, அவன் கைகள் தடுமாறின, நா தழுதழுத்தது. ஆம் ராமன் முதல் வகுப்பில் தேறியிருந்தான். அவன் மனம் காட்டாற்று வெள்ளம் போல், கட்டுக்கடங்காமல் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது.
அவன் கடவுளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி கூறினான். இந்த மதிப்பெண்கள் பெற காரணமாயிருந்த தந்தைக்கு நன்றிகளை உரித்தாக்கினான். என்றுமே பெற்றோரின் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அதன் பலன் பன்மடங்கு கிடைக்கும் என்பதை உணரந்தான்.
இந்த ஒரு வருடத்தில், விடாமுயற்சி, திட்டமிடுதல், உழைப்பு, காலநிர்வாகம், ஈடுபாடு, தன்னம்பிக்கை, என பற்பல திறமைகளை கற்றுக்கொண்டதை உணர்ந்தான். இனி வாழ்க்கையில் எவ்வித இடர்பாடுகள் வந்தாலும் எதிர் கொள்ள முடியும் என புரிந்து கொண்டான்.
ராமன் ஊருக்கு சென்று பெற்றொர்களிடம் தன் வெற்றியை பகிர்ந்து கொண்டான். தன் தந்தையின் கனவை நனவாக்கியதில் ராமன் பேருவகை எய்தினான்.