இராஜாஜியின் ‘பஜகோவிந்தத்’துக்கு எதிராக ‘பசிகோவிந்தம்’ எழுதியவர் விந்தன்

சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை தனது படைப்புகளில் எழுதியவர் விந்தன். அவரது நூற்றாண்டு ௨௦௧௬

“போலியைச் சுட்டெரிக்கும் புதுமை களை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக் கும் இரசாயனங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு ‘மின்சார சிகிச்சையளிக்கும்’ புத்தம் புது முறைகளை குரூர வசீகரங்களைப் படம்பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது, தங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப் பும் உணர்ச்சி மிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த, இருந்து வருகிற, ‘மனித மிருகங்’களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழிதேட முயலும் நவயுகக் கதைகளை இன்றுபோல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும். இதுவே என் எண்ணம். இதுவே என் இருபது வருட கால எழுத்து” (விந்தன்: 15.5.1956: விந்தன் கதைகள்: முன்னுரை)

“இன்று மனித வாழ்வில் முக்கியமாக இடம் பெற்றிருப்பவை மூன்று. முதலாவது கடவுள்; இரண்டாவது மதம்; மூன்றாவது கலை. எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்! என்று சொல்லாமல் சொல்லி மனிதனின் தன்னம் பிக்கையைக் கடவுள் கொன்று கொண்டிருக் கிறார். ‘இந்த உலகத்தில் அநுபவிக்கும் துன்பத் தைப் பற்றிக் கவலைப்படாதே; மறு உலகத்தில் இன்பம் உனக்காகக் காத்துக் கொண்டிருக் கிறது’ என்று சொல்லி மனிதனை மதம், சாவை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக் கிறது. கடைசியாக உள்ள கலையாவது மனிதனை வாழ வைக்கிறதா என்றால் அதுவும் இல்லை! கடவுளையும் மதத்தையும் சிருஷ்டி செய்து, மனிதனின் ஆயுளைக் காலத்திற்கு முன்னால் கொள்ளையடிக்கும் பிக்பாக்கெட் முதலாளிகளின் கத்தரிக்கோலாகவும் அது மாறி விட்டது! ஆம் மாறத்தான் வேண்டும்; மனிதன் மனிதனாக வாழத்தான் வேண்டும். இதற்கு வேண்டியதெல்லாம் என்ன?

‘ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் நம் உழைப்புக்கு ஏற்ற மதிப்பு’ அந்த மதிப்பைப் பெறுவதற்காகத் தான் இன்று கடவுளுடன் நாம் போராடுகிறோம்; மதத்துடன் நாம் போராடுகிறோம். இந்தக் கடுமையான போராட்டத்தில் நாம் வீழ்ந்தாலும் சரி, நம் சந்ததிகளாவது வாழ வேண்டும். மேற்படி குறிக் கோளுடன் எழுதப்படுபவை எதுவாயிருந் தாலும் அதுவே ‘மக்கள் இலக்கியம்’ (விந்தன்: சமுதாய விரோதி - சிறுகதைத் தொகுப்பு: முன்னுரை ஜூலை 1956)

கோவிந்தன் என்னும் விந்தன் (1916-1975) எவ் வகையான கருத்து நிலையோடு வாழ்ந்தார் என்பதை மேலே கண்ட அவரது இரு மேற்கோள்கள் நமக்குச் சொல்லும்.

விந்தனின் எழுத்துலக வாழ்க்கை, ‘கல்கியில் பணியாற்றிய காலம்’ (1942-1951), சுதந்திர எழுத்தாளராக இருந்து ‘பத்திரிகை நடத்துதல் மற்றும் திரைப்படத் துறையில் செயல்பட்ட காலம்’ (1952 - 1966), ‘தினமணிக்கதிர் இதழில் பணியாற்றிய காலம்’ (1967 - 1974) என்று பாகு படுத்திக் கொள்ள முடியும். இதில் முதல் கால கட்டத்தில் தான் அதிகமான சிறுகதைகளை எழுதினார். திரைப்படத்துறையில் செயல் பட்ட காலங்களில் நான்கு நாவல்களை எழுதி னார். முதல்கட்டத்தில் இரண்டு நாவல்கள் எழுதினார். இறுதிக் காலச்சூழலில் தான், புனை கதை அல்லாத வேறு வடிவங்களில் பெரிதும் செயல்பட்டார். இந்தக் காலச்சூழலில் செயல் பட்ட விந்தனின் ஆளுமை முன் செயல்பட்ட பரிமாணங்களிலிருந்து வேறு தளத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. தமிழ்ச் சமூக இயங்கு நிலைகளுக்கும் விந்தனின் ஆக்கங் களுக்கும் கால ஒழுங்கில் தொடர்ச்சியான உறவு இருப்பதைக் காண முடிகிறது. கால நிகழ்வுகளோடு தன்னைக் கரைத்துக் கொண்ட நேர்மையான மனிதனாக விந்தனின் செயல்பாடுகள் உள்ளன. வாழ்க்கை முழு வதும் சமரசம் செய்து கொள்ளாத வாழ்க்கைப் போராட்டம் அவருக்கு வாய்த்திருக்கிறது. வெகுசன வெளியில் செயல்படுபவர் களில் இவ்விதம் இருந் தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தப் பின்புலத்தில் விந்தனின் ஆளுமை என்பது தனித்துப் பேசவேண்டிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று கருதமுடியும்.

திரைப்பட உலகத்தில் செயல்படச் சென்ற விந்தன் அதற்காகவே ‘கல்கி’யிலிருந்து விலகி னார். அந்த உலகம் அவருக்கு உவப்பாக இல்லை. அந்த உலகத்திலும் தன்னுடைய அடையாளத்தைக் காட்ட முயன்றார். அவரது திரைப்பாடல் ஒன்று பின்வரும் வகையில் அமைகிறது.

“ஒண்ணும் புரியவில்லை தம்பி - எனக்கு / ஒண்ணும் புரியவில்லை தம்பி / கண்ணு ரெண்டும் சுத்துது / காதை வந்து அடைக்குது / கஞ்சி கஞ்சி என்று வயிறு / கெஞ்சிக் கெஞ்சிக் கேட்குது.

கடவுளை நம்பினேன் கற்பூரம் செலவு / கல்வியை நம்பினேன் காசெல்லாம் செலவு / மனிதனுக்கு மனிதன் மனமிரங்கவில்லை / மானத்தோடு வாழ மார்க்கம் ஏனோ இல்லை / சாலையிலே தொழிலாளி சம்சாரம் நடக்குது / ஆலையிலே அவனாவி புகையாகப் போகுது” (1953; ‘அன்பு’ திரைப்படம் )

திரைப்படத்துறையில் அவருக்கு ஏற்பட்ட நிறைவின்மையைப் பத்திரிகை நடத்துவதின் மூலம் போக்கிவிடலாம் என்று நம்பினார். இவ்வகையில், 1950களில் தமிழ்ச்சமூக நடைமுறையின் நேரடி விளைவாக விந்தன் போன்றோரின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பத்திரிகைத் துறையில் தொடர்ந்து செயல்பட்டிருக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்பாகவே கருத வேண்டும். தாம் பத்திரிகைத் துறையில் தொடர முடியாமைக்குப் பத்திரிகைகளை விற்பனை செய்யும் முகவர்களின் பித்தலாட்டம், ஏமாற்றுதல் ஆகியவற்றையே காரணமாக விந்தன் பதிவு செய்கிறார்.

இராஜாஜி ‘பஜகோவிந்தம்’ (1956) என்ற நூலை எழுதினார். இந்நூல் ‘மோக முத்கரம்’ என்ற பெயரில் சங்காராச்சாரி எழுதிய நூலின் வழிநூல். அந்நூலின் கருத்துகளை உள்வாங்கி 31 பாடல்களை இராஜாஜி எழுதினார். இராஜாஜியின் இந்நூலுக்குப் புடை (எதிர்) நூலாக ‘பசி கோவிந்தம் ’ (1956) என்ற நூலை விந்தன் எழுதினார்.

அவரது இறுதியான கையெழுத்துப்படி, 1973ல் எழுதிய ‘பெரியார் அறிவுச் சுவடி’ ஆகும். இக்குறுநூல் 2004ல் அச்சு வடிவம் பெற்றது. பெரியார் மறைந்த ஆண்டில் இதனை எழுதி விட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவரும் மறைந்தார்.

தமிழில் எழுதப்பட்ட ஆத்திச்சூடி, உலக நீதி, கொன்றை வேந்தன் ஆகிய சமயச்சார்பு நீதி நூல்களின் வடிவத்தில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. 1979ல் அதனைக் கையெழுத்துப் பிரதியாகப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விந்தன் மீது ஆழ்ந்த மரியாதையை இந்நூல் என்னுள் உருவாக்கியது.

இவ்வகையில் விந்தன் என்ற ஆளுமை தமிழ்ச் சமூகத்தில் செயல்பட பல பரிமாணங்களைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுண்டு. 2016ல் விந்தன் நூற்றாண்டு . அந்தக் கட்டத்தில் தமிழ்ச் சமூகத் திற்கு விந்தனை விரிவாக அறிமுகப்படுத்தும் ஆய்வுகளும் பரப்புரைகளும் நிகழ வேண்டும்.






(முனைவர் வீ. அரசு; நன்றி: ‘தீக்கதிர்’)

எழுதியவர் : (9-Jul-18, 6:14 am)
பார்வை : 48

மேலே