சாகும்போது எங்க போச்சு உங்க சாதி
பண்ணையாரே!
பாடுறேன் கொஞ்சம் கேளுங்க!
குனிஞ்ச தலைய நிமிராம - தெனம்
கூலிவாங்கி போனோம்!
கிழிஞ்ச எலையா கிழிபட்டு – ஓட்ட
கிளிஞ்சல்போல ஆனோம்!
அடுப்புல கரியா - வாழ்க்கையில்
கருகி போனோம்!
இடுப்புல சரியா துண்டுகட்டி
பழகி போனோம்!
கஞ்சிதண்ணி குடிச்சி
காலத்த கழிச்சோம் – அத
நெஞ்சிஎண்ணி துடிக்கையில
கடவுளத்தான் பழிச்சோம்!
கோமணத்த கட்டிகிட்டு
கூழ்குடிக்க சொன்னாரு –இவரு
கொட்டாஞ்சில டீ ஊத்த
கடத்தெருவுல நின்னாரு
எச்சியெல பொறுக்கச் சொல்லி
எச்சரிக்கை விட்டாரு-எங்கள
எட்டுஅடி தள்ளி நடக்கச் சொல்லி
கட்டளைகள் இட்டாரு
காட்டுபக்கம் கொட்டாபோட கூவத்துல
பட்டாசொத்து வாங்கி தந்தாரு- நாங்க
ரோட்டுபக்கம் நடந்துபோனா கோவத்துல
பட்டாகத்திய ஓங்கி வந்தாரு
இவரு…
சாதிசாதியா பிரிச்சி வச்சாரு
சதியவலையா விரிச்சி வச்சாரு
நிலுவையில ஜோதிய ஊதி அணைச்சு வச்சாரு
சிலுவையில நீதிய வீதியில அறைஞ்சு வச்சாரு
வெட்டிசாதிய வச்சிகிட்டு வழியில
வேலிபோட்டு தடுத்தாரு!-இவரு
வெட்டியான் வெட்டிவச்ச குழியில
வெட்கமில்லாம வந்து படுத்தாரு!
-அம்பேத்