மாமலை சபரியிலே
மலைமீதில் மணிகண்டன் வீற்றிருக்கும் கோலம்
***மனங்குளிர தரிசித்தால் விலகுமகங் காரம் !
சிலைவடிவில் சிங்கார மாயமர்ந்த காட்சி
***சீர்மிகுந்த சபரியிலே என்றுமவன் ஆட்சி !
அலைகடலாய்த் திரண்டுவரும் அடியவர்கள் கூட்டம்
***அன்பொழுக வேண்டிடிலோ மறைந்துவிடும் வாட்டம் !
தலைமேலே இருமுடியைச் சுமந்தபடிச் செல்வார்
***சரணங்கள் கைதட்டி வழிநெடுகச் சொல்வார் !
பதினெட்டுப் படியேறப் பரவசமும் கூடும்
***பம்பையிலே நீராடப் பாவங்கள் தீரும் !
அதிரூபன் முகங்கண்டால் அகமுழுதும் பூக்கும்
***அலங்காரப் பிரியனவன் அருட்பார்வை யீர்க்கும் !
மதிசூடி மைந்தனவன் கமலமலர்ப் பாதம்
***மயக்கிவிடும்; இருவிழியோ பேசுமொழி வேதம் !
துதிப்போரை யரவணைத்துக் கருணைமழை பெய்வான்
***துணைநின்று சந்ததமும் பக்தருளம் கொய்வான் !
மெய்யன்பா யுருகிவிழி நீர்மல்கி வேண்ட
***மெய்ப்பொருளைக் கண்டிடலாம் மாமலையி லிங்கே !
நெய்யாலே அபிடேகம் சுவாமிக்குச் செய்ய
***நெஞ்சுக்குள் நிம்மதியும் ஊற்றெடுக்கு மிங்கே !
தெய்வத்தின் சன்னிதியில் திருவிளக்கை ஏற்ற
***தீராத வினையாவும் தீர்ந்திடுமா மிங்கே !
ஐயப்ப னருளாலே மகரஜோதி கண்டால்
***ஐம்புலனு மடங்கிப்பின் அமைதியுறு மிங்கே !!
சியாமளா ராஜசேகர்