காமராஜர் வாழ்க்கை வரலாறு -

காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநிலமுதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தைஅறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர்என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின்,1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னாவிருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.

ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார் விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார்.

1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார்.

காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.

தமிழக ஆட்சிப் பொறுப்பு

1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)

குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.

ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி.

முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.

ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.

காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும். 2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர்.

இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார்.1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.



முனைவர் கோ.ஜெயக்குமார்
ஜெயஸ்ரீ .கைப்பேசி-9176999946

எழுதியவர் : (22-Jul-18, 7:53 am)
பார்வை : 206

மேலே