அன்பில் அவள்
மலர்ந்த பிஞ்சை தளர்ந்த நெஞ்சில்
தாலாட்டி சிறாட்டி கேட்கும் முன்பே சோறுட்டி
மெய் வளர்ச்சி அவளுக்குப் பொய் பேச்சி
நாம் மெலிந்து இருப்பதாய் அவள் காட்சி
இவள் தட்டில் மட்டும் என்றும்
கடைசி உருண்டை பல இருக்கும்
புவியோ புருஷனோ என்றும் அவள்
பேரக்குழந்தைக்குப் பின்னரே என்று காட்டும்
அன்பில் அவள் பாட்டி
கணவன் கொடுத்த அன்பு பரிசை
கருவில் சுமந்து உருவம் கொடுத்து
உதிரம் விடுத்து உயிராய் எடுத்தாள்
மழலை மொழி அறியும் அகராதி
சொல்லாமலே உணர்வாள் என்றும் மறவாதே
மலம் உணர்ந்து பிள்ளை நலம் காப்பாள்
தண்டித்து பின் தலைகோதி அழுதிடுவாள்
மாறாது மன்காது மறையாது இருக்கும்
அன்பில் அவள் அன்னை
உன்னோடு இருந்திடுவாள் உடைமைகளை பகிர்ந்திடுவாள்
கோல்மூட்டி சிரித்திடுவாள் தண்டனைக் கடுமை
என்றால் உடனிருந்து அழுதிடுவாள்
வேஷம் பாதி பாசம் பாதி என்றிருப்பாள்
வேண்டும் என்றே எப்பொழுதும் வம்பு இழுப்பாள்
வீட்டில் என்றும் உன்னை தாக்கிடுவாள்
ஊருக்கு முன் உனக்காகப் போரிடுவாள்
வேண்டி விரும்பி உன்னைச் சீண்டி தாக்கும்
அன்பில் அவள் சகோதரி
தோல் சாய்ந்து நடந்திடுவாள்
தொல்லைகள் பல தந்திடுவாள்
உடனிருந்து உயிர் எடுப்பாள்
அவள் இல்லையென்றால் நீ உறுகிடுவாய்
உன்னை உலகிற்கு உணர்த்திடவே அவள்
மகப்பேறு என்னும் மறுபிறவி எடுத்திடுவாள்
குடிபெயர்ந்து உன் குலம் காக்க வந்தவள்
பண்ணோடு பக்குவமாய் பாரபட்சமின்றி தரும்
அன்பில் அவள் காதலி மனைவி
உன்னாலே உலகிற்கு உன்னவளால் உதித்தவள்
தாயிற்கு நிகராக இதயத்தில் வீற்றிருப்பவள்
தவழும் வயதிலும் தாவணி அணிந்தபொழுதும்
தடிப்பிடித்து நடந்தாலும் நீ தேடும்
ஒரு தேவதையாய் வாழ்ந்திடுவாள் அவள்
முன்னே பெரிது என்று ஏதும் இல்லை
அவள் மணநாள் உந்தன் வலியின் எல்லை
நின் கைப்பிடித்து தன் கண் சிமிட்டி கொஞ்சும்
அன்பில் அவள் மகள்
கூடிச்சேர்ந்து கொட்டம் அடித்துத் திரிபவள்
கள்ளம் இன்றி கை பிடித்து அலைபவள்
தொல்லை தந்து தொடர்ந்து வரும் உயிரிவள்
சில நேரம் உரிமை கொள்ளும் தாய் ஆவாள்
பல நேரம் உன்னைக் கொல்லும் பேய் ஆவாள்
உதவிக்கு அவள் உடன்பிறப்புக்கு இணையாவாள்
உன்னதமான உறவுக்கு என்றும் இன்றியமையாதவள்
தவம் ஏதுமின்றி வரமாக வழங்கும்
அன்பில் அவள் தோழி