எது உச்சம் எது மிச்சம்

பொட்டு வைத்த
மாமனே ..
பொத்தி வைத்த
ஆசைகள்,
இட்டு வைத்த
எல்லைகள்
கட்டுக்கோப்பில்
இல்லையே ..

மூன்று முடியில்
சான்றிதழ் பெற்றதால் ..
தோன்றும் எண்ணம்
மாறுதல் பெற்றதோ ?

பொழுதும் சாய ..
புடவையும் சாய
வெட்கம் சூடி
ஆறுதல் உற்றதோ ?

மூடு பனியாய்
உறைந்த பெண்மை
மூச்சுக்காற்றில்
உருகிடுதே ..

தேடியே கைகள்
தீண்டிடும் போது
மூங்கில் துளையாய்
முணங்கிடுதே ..

வெற்றிடம் இன்றி
கட்டி தழுவிட
இதழ் வெற்றிலை
இன்றி சிவந்திடுதே .

மன்மதன் அம்புகள்
தாக்கிச் செல்ல
அரும்புகள் மெல்ல
முளைவிடுதே .

தேக மின்சாரம்
தாக்கியதில்
மிதவையில் எண்ணம்
உலவிடுதே.

மோகம் அள்ளிப்
பருகியதால்
போதையில் பெண்மை
சுழலிடுதே.

நான் கோதையா ?
இல்லை பேதையா ?
எனும் ஐயம்
என்னுள் எழுகிறதே !

எது உச்சம் ?
எது மிச்சம் ?
தேடல் மட்டும்
தொடர்கிறதே ...

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (1-Aug-18, 6:57 pm)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 419

மேலே