தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்

அகத்தியர் காவிரியை ஒரு கலசத்தில் அடக்கிக் கொண்டு வந்தார். அப்போது அந்த காவிரி நீர் அடங்கிய கலசத்தைக் கவிழ்த்து ஒரு காகம் பறந்தோடியது. இதனால் வெகுண்டார் அகத்திய முனிவர். யார் அந்தக் காக்கை என்று அறியப் பின் தொடர்ந்தார். காக்கை ஒரு சிறுவனாக உரு மாறியது. அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்த அகத்தியர் விநாயகரே அப்படி காக்கை உருக் கொண்டு வந்துள்ளார் என்பதை அறிந்தார். சிறுவனைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த அகத்தியர் விநாயகரை நோக்கி, “ அறியாமல் உங்களைக் குட்டுவதற்காகப் பின் தொடர்ந்த என்னை மன்னிக்க வேண்டும்” என்று இறைஞ்சி வேண்டினார். அத்தோடு, “அந்தக் குட்டு எனக்கே ஆகுக” என்று கூறி இரு கைகளையும் சேர்த்து அகத்தியர் குட்டிக் கொண்டார். ‘இது போலக் குட்டிக் கொண்டு வணங்குவோரின் வணக்கத்திற்குப் பெரிதும் மகிழ்ந்து அருள் புரிதல் வேண்டும்’ என்றும் அகத்தியர் விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டார். “அவ்வாறே அருள் புரிகின்றோம்” என்று விநாயகர் வரத்தைத் தந்தார். அது முதல் குட்டிக் கொண்டு விநாயகரை வழங்கும் பழக்கம் தோன்றியது. இந்தச் சம்பவம் நடந்த இடம் கொங்கு நாடு. ஆக இப்படிக் குட்டிக் கொண்டு வழிபடும் முறை கொங்கு நாட்டிலேயே முதலில் தோன்றியது.

அந்தப் பெருமை உடைத்து கொங்கு மண்டலம் என்று கொங்கு மண்டல சதகம் ஒன்பதாம் பாடல் பெருமை படக் கூறுகிறது.


ஐங்கைப்புத் தேளைத் தொழுகின்ற பேர்க ளகங்கசிந்து செங்கைத்
துணைமுட்டி யாய்த்தலை யிற்குட்டிச் சீர்பெறுநற் றுங்கப் பணிவிடை
முற்றோன்று தானஞ் சுரர்மகிழு மங்குற் பொழிறிகழ் காவேரி சேர்கொங்கு
மண்டலமே

பொருள் : விநாயகக் கடவுளை வணங்குவோர், தலையிற் குட்டிக் கொள்ளும் பழக்கமானது, முதலில் உண்டான இடம் கொங்கு மண்டலம் என்பதாம்.


S நாகராஜன்

எழுதியவர் : (9-Aug-18, 6:44 pm)
பார்வை : 36

மேலே